உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மறைமலையம் - 29 ×

பேறு பெற்றும், அதுவே வேறொரு பொருளை யுணர்த்துங்கால் வேறொரு வகையான எழுத்துப் பேறு பெற்றும் பல வகையாற் றிரிபெய்திப் பற்பல சொற்கள் பிறத்தற்கு இடனாய் நிற்கும். அங்ஙனம் ஒரு முதனிலை பலவேறு பொருளுடைய பல சொற்களைப் பிறப்பிக்குங்கால், தான் முதன்முதல் உணர்த்தும் பொருளும், பின்னர்ப் பலப்பல சொற்களில் இயைந்து நின்று உணர்த்தும் பொருளும் உவம உருவக வகையால் ஒன்றோடொன்று, தொடர்புடையனவாயே யிருக்கும். இவ்வியல்புகளை 'வேதம்' என்னுஞ் சொல்லுக்கு முதனிலையான 'வே' என்பதனின்றே காட்டுதும். 'வே' என்னும் முதனிலைக்கு முதன்முதல் உண்டான பொருள் தீயிற்பட்டு அல்லது தீயின் சேர்க்கையால் ஒரு பொருள் வேகுதலே' யாகும். இப்பொருளை யுணர்த்துந் தமிழ்ச் சொற்களில் ‘வேகுதல்' வேக்காடு' என்பவற்றின் முதனிலை ககர ஒற்றப் பெற்று ‘வேக்' என நிற்கும்; 'வேடை', 'வேட்டல்' என்பவற்றின் முதனிலை டகர ஒற்றுப் பெற்று 'வேட்' என நிற்கும்; 'வேதல்', 'வேதி', 'வேது என்பவற்றின் முதனிலை தகர ஒற்றுப் பெற்று வேத்' எனநிற்கும்; 'வேவு' என்பதன் முதனிலை வகர ஒற்றுப்பெற்று 'வேவ்' எனநிற்கும், 'வேள்வி என்பதன் முதனிலை ளகர ஒற்றுப் பெற்று 'வேள்' என நிற்கும்; 'வேனல் 'வேனில்' என்பவற்றின் முதனிலை னகர ஒற்றுப்பெற்று வேன்' என நிற்கும். இனி, 'வே' என்னும் முதனிலை 'வெ' எனக் குறுகி அப்பொருள்படும் பல சொற்களைப் பிறப்பிக்குமிடத்தும் அங்ஙனமே பல்வேறு

ஒற்றெழுத்துகளைப்பெற்று நிற்கும்; வெக்கை, வெச்சு, வெட்டை, வெண்டல், வெதுப்பு, வெந்திப்பு, வெந்தை, வெப்பம், வெம்பல், வெயில், வெய்து, வெவ்விது என்பவற்றின் முதனிலைகள் முறையே வெக், வெச், வெட், வெண், வெத், வெந், வெப், வெம், வெய், வெவ் எனப் பலவேறொற்றுக்கள் பெற்று நிற்றல் காண்க.

இனி, இவ் 'வே' என்னும் முதனிலை வேறு பொருள்களை யுணர்த்துமாறு காட்டுதும். ஒரு பொருளை வேவுவிக்குங்கால், அதனை ஒரு பாண்டத்தின் உள்ளே நீரிற்பெய்து, அப் பாண்டத்தின் வாயை ஒரு தட்டிட்டு மூடித் தீமேல் வைத்து வேவுவிக்கக் காண்கின்றோம். அவ்வொப்புமை பற்றி 'வே' என்னும் முதனிலை மூடுகின்ற அல்லது மறைக்கின்ற பொருள்களையும் இரண்டாவதாக உணர்த்தும்; இப்பொருளில் 'வேடு' என்பது மூடுசீலை யினையும், 'வேதல்' என்பது வீடு கூரை மூடுதலையும், 'வேதம்' என்பது மூடு பொருளையுடைய நூலினையும், 'வேயுள்' என்பது மூடப்பட்ட வீட்டினையும், 'வேய்தல்' என்பது கூரைமேய்தலையும், 'வேலி' என்பது ஒரிடத்தைச் சுற்றிக் காவலாய் மறைப்பதையும், 'வேவு' என்பது மறைந்து நின்று செய்தியறியும் ஒற்றரையும் உணர்த்தா நிற்கும். இச் சொற்களின் முதனிலைகளும் மேற்காட்டியவைகளைப் போலவே 'வேட்', 'வேத்', 'வேய்', 'வேல்', 'வேவ்', எனப் பல வேறு ஒற்றுகள் பெற்றுநிற்றல் காண்க; அவ்வாறு பலவேறு ஒற்றுக்கள் பெற்று நிற்பினும், அம்முதனிலைப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/311&oldid=1592095" இலிருந்து மீள்விக்கப்பட்டது