6
அப்பாத்துரையம் – 43
பாதை, எது சுருக்கப் பாதை எது இடையூறற்ற அல்லது இடையூறு குறைந்த பாதை என்று அறிய வேண்டி வரலாம். ஆனால் இரண்டில் ஒன்றே அவன் விரும்புமிடம் செல்வதாகவும் இருக்கக்கூடும். ஒன்று விரும்புமிடத்திற்குச் செல்வதாகவும், மற்றொன்று நெடுந்தொலை சென்று பின் பொட்டென முடிவதாகவும் இருக்கலாம். தவறான வழியில் செல்ல நேர்ந்தால், போனவழியே மீண்டும் வந்து புறப்பட்ட இடத்திலிருந்து மற்றொருமுறை புறப்பட வேண்டி வரும். தவறான பாதையில் இடையூறு அல்லது உயிரூறு ஏற்படின், அவன் துன்பமோ அழிவோகூட எய்தக்கூடும். சில சமயம் பார்ப்பதற்கு அகலமான கவர்ச்சியான பாதையே தவறான பாதையாகவும், தோற்றத்தில் கடுமையான, கவர்ச்சியற்ற நெறியே சால்புடைய நெறியாகவும் இருக்கலாம். இவற்றை யெல்லாம் ஏற்கெனவே சென்றறிந்து வகை தொகைகண்ட ஒருவன், அல்லது கண்டவர் கூறக்கேட்ட ஒருவன் நட்பு முறையிலறிந்து கூறினால், வழிப்போக்கனுக்கு நேரமும் உழைப்பும் எவ்வளவு மிச்சப்படும்! எவ்வளவு இடையூறுகளிலிருந்து அவனுக்குப் பாதுகாப்பு ஏற்படும்! அத்தகைய வழித்துணை போன்றவை வாழ்க்கைப் படிப்பினைகள்.சிறுவர்க்கும் இளைஞர் கட்டும் இவை ஆன்ற பயன் தருவன்.
சிறுமைப்போதில் மனிதன் பெற்றோர்களின் நல்லாதரவில் இருக்கிறான். அவன் தன்னைப் பற்றி அப்போது சிந்திக்க முடியாது; சிந்திக்கவும் தேவையில்லை. அப்பொறுப்பு முழுவதும் பெற்றோரைச் சார்ந்ததாகிவிடுகிறது. அவர்களே குழந்தையின் நலத்தில் குழந்தையினும் அக்கறை காட்டி, குழந்தையின் நன்மை தீமைகளினால் பலகால் அக்குழந்தையினும் மிகுதி இன்பதுன்பம் அடைபவராவர். ஆனால், பெற்றோர் ஆதரவிலிருந்து சற்று நெகிழ்வு பெற்று ஆசிரியரின் ஆதரவு பெறும் நிலையில் சிறுவர் பொறுப்பு ஓரளவு தொடங்குகிறது. பெற்றோர் ஆதரவில் செயலற்ற நிலையிலிருந்த அவர்கள் இப்போது செயல்துணை அளித்து வழிகாட்டும் ஆசிரியர் வழிநின்று செயலாற்றுபவர் ஆகிறார்கள். ஆனால் பதினான்கு பதினைந்து ஆண்டுப் பருவமடைந்தும், அவர்கள் பெரும் பாலும்தம் வாழ்க்கைக்குத் தாமே பொறுப்புக்கொள்ள வேண்டியவராகிறார்கள்.