உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம்

1

மட்டம் என்பவையெல்லாம் சம நிலைப்பொருள். இப் பொருளை விடுத்துக், குறைவு என்னும் பொருள் தருதலும் வழக்கில் உண்டு. “அவன் மட்டமானவன்” என்றால் சமநிலை யாளன், ஒப்புரவாளன் எனப் பொருள் தராமல், கீழானவன். குறைவானவன் என்னும் பொருள் தருவதாம். மட்டமாகப் பேசிவிட்டான் என்றால் இழிவாகப் பேசிவிட்டான் என்பது பொருளாம்.

மட்டை - கூரற்றவன்

கூர் தேய்ந்தது மட்டை எனப்படும். முழுதாகக் கூர் அழிந் தது முழு மட்டை, மழுமட்டை எனப்படும். கரிக்கோலைச் சீவ வேண்டும் (Pencil) மட்டையாக இருக்கிறது என்பது வழக்கு. இம்மட்டை மழுங்கிய பொருளைக் குறிப்பது நீங்கி, கூர்மை யில்லாதவனைக் குறிக்கும் வகையில் வழக்கில் உண்டு. குட்டை யில் ஊறிய மட்டை, நாறுதல், அழுகல் பொருள்தரும். மடியில் மாங்காயிடல் - திட்டமிட்டுக் குற்றப்படுத்தல்

மாந்தோப்புப் பக்கம்போனான் ஒருவன். அவன் மேல் குற்றம் சாட்டித் தண்டனை வாங்கித் தரவேண்டும் எனத் தோட்டக்காரன் நினைத்தான். உடனே மரத்தின் மேல் ஏறி ஒரு மாங்காயைப் பறித்து, வழியே போனவன் மடியில் வைத்துவிட்டு அவன் கையைப் பின்கட்டாகக் கட்டிக் கொண்டு ஊர் மன்றுக்கு அழைத்துச் சென்று குற்றம் சாற்றினான். குற்றம் சாற்ற வேண்டு மென்றால் குற்றமா கி கி L யாது? வல்லடிக்காரனுக்குக் குற்றமொன்றைப் படைத்துச் சான்றுடன் உறுதிப்படுத்துவது தானா கடினம். “மடியில் மாங்காயிட்டது போல மாட்டிவைத்து விட்டானே” என்பது வழங்குமொழி.

மடியைப் பிடித்தல் - இழிவுபடுத்தல்; கடனைக் கேட்டல்

மடி என்பது வேட்டி என்னும் பொருளது. மடி என்பது வயிற்றையும் குறிப்பது. வயிற்றுப் பகுதியில் வேட்டிச் சுற்றில் பணம் வைப்பதும் பணப்பை வைப்பதும் வழக்கம். மடியைப் பிடித்தல் என்பது கடனைக் கேட்டல் என்னும் பொருளிலும், இழிவுபடுத்தல் என்னும் பொருளிலும் வந்தது. வேட்டியைப் பிடித்தல் என்பது அவிழ்த்தலின் முற்பாடு, உடுக்கை இழக்க நேர்வது - அதனைக் குறிப்பால் குறித்தல் கூட இழிவாவது. அதற்கு 'மடி' வேட்டி; மடியில் வைத்த பணம் ‘மடி’ ஆயது இடவாகுபெயர். இரண்டு நிலைகளாலும் இருபொருள்கள் கிளர்ந்தன.