உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மிக நீங்கின் குளிர்போக்காததுமான தீயை, உவமித்தது மிகப் பொருத்தமான வினையுவமையாம்.

692. மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய வாக்கந் தரும்.

(இ-ரை.) மன்னர் விழைப விழையாமை - தம்மால் அடுக்கப்பட்ட அரசர் தம் பதவிக்கேற்பச் சிறப்பாக விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதிருத்தல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் அவ் வரசர் வாயிலாகவே அமைச்சர் முதலியோரான தமக்கு நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்.

'மன்னர் விழைப' என்றது உண்டி, ஆடையணி, உறையுள், ஊர்தி, பெண்ணின்பம் முதலியவற்றுட் சிறந்த வகைகளையும்; கண்ணியம், புகழ் முதலியவற்றில் ஒப்புயர்வின்மையையும்; அரசனுக்கென்றே ஒதுக்கப்பெற்ற ஆடிடம், நீர்நிலை முதலியவற்றையும். அரசனுக்கு ஒப்பாதல் அஞ்சி இவற்றை விரும்பாதொழியவே, அரசனே அவ் வச்சத்திற்கு மகிழ்ந்து பலவகைச் செல்வத்தையும் நிலையாக நுகரத் தருவன் என்பதாம்.

693. போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்
றேற்றுதல் யார்க்கு மரிது.

(இ-ரை.) போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்க விரும்பின் கடும்பிழைகள் தம்மேல் வராமற் காத்துக் கொள்க; கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை நிகழ்ந்தனவாகக் கேள்விப்பட்ட அரசர் ஐயுற்றபின் அவரைத் தெளிவித்தல் எத்துணைச் சிறந்தவர்க்கும் அரிதாம்.

கடும்பிழைகள் பகைவராற் கீழறுக்கப்படுதல், அரசர்க்கேயுரிய உரிமை மகளிரொடு பழகுதல், அரசன் உத்தரவின்றி அவனறைக்குட் புகுதல், அரும்பொருள் கவர்தல் முதலியன. கீழறுக்கப்படுதலாவது பகைவரிடம் பொருள் பெற்றுக்கொண்டு அவருக்குத் துணையாயிருக்க உடன்படுதல். இது அறைபோதல் எனவும் படும். இத்தகைய குற்றங்கள் வராமற் காத்தலாவது, யாரேனும் இவை நிகழ்ந்ததாக அரசனிடம் சொல்லினும், அதை அவன் கடுகளவும் நம்பாதவாறு தூ-மையாக ஒழுகுதல். ஒருமுறை ஐயுற்றபின், அதை ஒருவகையால் தெளிவித்தாலும், அவர் உள்ளத்தில் அது என்றும் நிலைத்திருக்குமாதலின், 'யார்க்கு மரிது' என்றார். உம்மை உயர்வுசிறப்பு.