உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

திருக்குறள்

தமிழ் மரபுரை


694. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக
லான்ற பெரியா ரகத்து.

(இ-ரை.) ஆன்ற பெரியாரகத்து - வலிமை நிறைந்த அரசரருகில் இருக்கும்போது; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவர் காதிற்குள் மெதுவாகச் சொல்லுதலையும் ஒருவர் முகம் நோக்கிச் சிரித்தலையும் அடியோடு விட்டுவிடுக.

'சேர்ந்த நகை' என்றதனால் பிறரொடு கூடிச் சிரித்தலும் அடங்கும். 'செவிச் சொல்லும் சேர்ந்த நகையும்' தம்மைப்பற்றியே நிகழ்ந்தனவாகக் கருதிக் கடுஞ்சினங் கொள்ளின் அன்றே அழித்துவிடும் ஆற்றலராதலின், 'ஆன்ற பெரியார்' என்றும் 'அவித்தொழுகல்' என்றும், கூறினார்.

695. எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை.

(இ-ரை.) மறை - அரசனுக்குப் பிறரோடு ஒரு மறைபொருள்பற்றிப் பேச்சு நிகழும்போது; எப்பொருளும் ஓரார் - அதில் எந்தப் பொருளையும் செவிசா-த்து உற்றுக் கேளாமலும்; தொடரார் - அவனை அணுகி வினவாமலும் இருந்து; மற்று அப் பொருளை விட்டக்கால் கேட்க - பின் அம் மறை பொருளை அடக்கிவையாது அவனே வலியச் சொன்னால் அமைச்சர் முதலியோர் கேட்டறிக.

தம்மைப்பற்றியதாயினும் என்பார் 'எப்பொருளும்' என்றார். 'ஓரார்', 'தொடரார்' என்பன எதிர்மறை முற்றெச்சம். 'மற்று' பின்மைப் பொருளில் வந்தது; வினைமாற்றின்கண் வந்ததன்று.

696. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில்
வேண்டுப வேட்பச் சொலல்.

(இ-ரை.) குறிப்பு அறிந்து - அமைச்சர் முதலியோர் அரசனுக்குச் செ-தி சொல்லுங்கால் அவன் உள்ளக் குறிப்பையறிந்து; காலம் கருதி - சொல்லுதற் கேற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இல வேண்டுப வேட்பச் சொலல் - அவனுக்கு வெறுப்பில்லாதவற்றையும் வேண்டியவற்றையும் அவன் கேட்க விரும்பும் வகை சொல்க.

கோப்பெருந்தேவி ஊடியிருக்கும்போது காமம்பற்றிய அவலமும், பகையரசர் இகழ்ந்து ஓலைவிடுத்தபோது வெகுளியும் பிறந்து, வேறு செ-தி