உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்
அ
அஃறிணை : உயர்திணை அல்லாத திணை அஃறிணை; இழிதிணை என்றவாறு. இது பண்புத் தொகை. (அல்+திணை) (நன். 260. மயிலை.)
அக்காள் : உடன் பிறந்தோருள் வயதால் மூத்த பெண்ணை அக்காள் என்பது மரபு. துயரக் கடவுளாம் மூதேவி, செல்வக் கடவுளாம் சீதேவிக்கு மூத்தவள் என்ற புராணக் கதை பரவிய பிறகு அக்காள் என்றால் மூதேவி என்னும் பொருளைத் தரத் தொடங்கிவிட்டது. "அவன் வீட்டில் அக்காள் குடியிருக்கி றாள்” என்றால் அவன் வறியன் என்று பொருள். அக்காள் என்ற சொல் இழிபொருளைப் பெற்று விட்டது. தமக்கை என்ற சொல் அதன் இடத்தைப் பற்றிக் கொண்டது.
(பழந்தமிழ். 71)
அகத்திணை : அகத்திணை என்ற தொடரில் அகம் என்னும் சொல்லுக்கு இயல்பான பொருள் ‘வீடு' என்பது. “அகம் புகல் மரபின் வாயில்கள்” என்பது தொல்காப்பியம் (1097). வீடு அல்லது குடும்பம் ஆகும் காதலே, அகத்திணை நுதலுவது. அகத்திணை மாந்தரெல்லாம் ஒரு வீட்டுறுப்பினர்களே. ஆத லின் அகம் என்னும் சொல் வீடு என்பதனையே முதலாவதாகக் குறிக்கும். எனினும் இல், மனை, வீடு என்ற பல சொற்கள் இருக்கவும் இச் சொல்லைக் குறியீடாகத் தேர்ந்தெடுத்தது ஏன்? அகத்திணை சங்கப் படைப்பு... சங்கத்தார் தாம் வடித்த புதிய காதல் இலக்கியத்தின் கூறுகள் எல்லாம் தோன்றத் தக்கதொரு சொல்லை ஆராய்ந்தனர். காதலர் தம் உள்ளப் புணர்ச்சி அவ்விலக்கியத்தின் உயிர்க்கூறு. உள்ளம் என்னும் பொருளும் அகச்சொல்லுக்கு இயல்பாக இருத்தலின் அகத்திணை என்று இலக்கியக் குறியீடு வைத்தனர். (தமிழ்க் காதல். 327)