14
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
எவ்வெவற்றையோ கட்டுப்படுத்தித் தன் இச்சைப்படி ஆட வைக்கிறான்; அதுபோல், அவன் மனத்தை மட்டும் கட்டுப்படுத்த இயலாமல் திணறுகிறான்; கவலையில்லாமலும் திரிகிறான்.
உள்ளத்தைக் குரங்கு என்பவர்களும் உளர்; குதிரை என்பவர்களும் உளர். இதுபோல், உறுப்புக்களை யானை ம் என்பவர்களும் உளர். ஐம்பொறிகளும் விரும்பியபடி யெல்லாம் அலைந்தால், காட்டு யானைகள் தாமே அவை! அவற்றை அடக்குவதுதான் மனிதன் என்பதற்குரிய அடையாளம்.
கோட்டையும் படையும் கொண்டு குவலயம் ஆளும் ஆற்றல் படைத்தவனுக்கும் அவன் உள்ளத்தை அடக்கி ஆள்வது அரிதாயுள்ளது. புறத்தே வந்து தாக்கும் பகைவர்களை யெல்லாம் புறமிட்டு ஓடத் தாக்கவல்ல வீரர்கள், உள்ளிருந்தே தம்மைக் கெடுக்கும் தீய எண்ணங்களாம் பகைவர்களை அழிப்பது அரிதாகின்றது. இவ்வாறானால் அது உண்மை வீரமா? அவர்களும் உண்மை வீரர்களா?
ய
உள்ளத்தை அடக்கி ஆள முடியாமை ஏன்? உள்ளம் ஓடி ஓடிப் போக விடுத்து, ஒருநாளில் எங்கும் போகக்கூடாது எனத் திடுமெனத் திட்டமிட்டால் முடியுமா? கோழி குப்பையைக் கிளறும்; அப் பழக்கத்தால் பளிங்கு பதித்த தரையிலும் கிளறும்; பழக்கத்தால் வந்தது இது. இதனால் தெரிவது என்ன? நல்லவற்றை நாம் நாள் தவறாமல் நினைத்தும் செய்தும் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும்; உறங்கினாலும் விழித்தாலும் நம் கட்டளையையோ, முயற்சியையோ எதிர்பாராது ஓடுகின்ற மூச்சு போல, உறுப்புக்களும், அவற்றில் தலையாய உள்ளமும் ஒழுங்கான உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டுவிட வேண்டும்.
காந்தியடிகள் மூன்று பதுமைகள் வைத்திருந்தார். மூன்றும் குரங்குப் பதுமைகள், மூன்றும் மூவேறு தன்மையன; ஒன்று கைகளால் கண்ணை மூடியிருக்கும்; மற்றொன்று - வாயை மூடியிருக்கும்; இன்னொன்று காதை மூடியிருக்கும். ஏன் பார்க்க வேண்டியதைப் பார்க்கவும், பேசவேண்டியதைப் பேசவும், கேட்கவேண்டியதைக் கேட்கவும் வேண்டும். அடக்கமின்றிப் பார்க்கவும். பேசவும், கேட்கவும் கூடாதென்பதைக் காட்டுவதற் காகவே இவற்றை வைத்திருந்தார். காந்தியடிகள் எப்படி அடங்கி வாழ்ந்தவர்! இணை சொல்ல இயலுமா? குணமென்னும் குன்று ஏறி நின்ற அவரே, தம் கண்முன் இவற்றை வைத்துப் போற்றினார் என்றால் நாம் உள்ளத்தை அடக்க, எவ்வளவு உறுதிப்பாடு கொள்ள வேண்டும்?