162
ஒப்பியன் மொழிநூல்
தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டிலுள்ளது. இது ஒரு படிமுறைப் பகுப்பு. கிறித்தவமறையில், ஆதியாகமம் முதலதிகாரத்தில், படைப்பைக் கூறும்போது, நிலைத்திணை, நீர்வாழி, பறவை, விலங்கும் ஊர்வனவும் என்பன முறையே படைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. இதுவும் ஒரு படிமுறைப் பகுப்பே. இதனால், கிறித்தவமறைக்கும்
தொல்காப்பியத்திற்கும் ஒர் இயைபு கூறமுடியாது.
சமண
சின்கிளேர் ஸ்ற்றீவென்சன் அம்மையார் (Mrs. Sinclair Stevenson) தாம் எழுதிய ‘ஜைன நெஞ்சம்' (The Heart of Jainism) என்ற நூலில், 7ஆம் அதிகாரத்தில் முறைப்படி உயிர்களை 13 முறையிற் பலவாகப் பகுக்கின்றார். அவற்றுள், 4ஆம் முறையிற் புலன்பற்றி உயிர்களை ஐந்தாகப் பகுத்து, அவ் வைந்தனுள் ஐயறிவுயிரை மீட்டும் பகுத்தறிவுண்மை யின்மைபற்றி இரண்டாக வகுக்கின்றார். பின் 10ஆம் அதிகாரத்தில், பிரதிமா என்னும் பெயரால், ஒரு ஜைனன் மேற்கொள்ளவேண்டிய 11 சூளுறவுகளை யுங் குறிக்கின்றார். ப்ரதிமா என்பதற்குப் படிமா என்னும் மறுவடிவமும், 221ஆம் பக்கத்தில் அடிக்குறிப்பிற் காட்டப் பட்டுள்ளது. இங்ஙனம் அவர் கூறியதால், வடநாட்டில் வழங்கும் தமிழ்ச்சொற்களையும் தமிழக் கொள்கைகளையும், சமணர் மேற்கொண்டு வழங்கினர் என்பதல்லது, தொல்காப்பியர் சமணர் என்பது எங்ஙனம் பெறப்படும்? தமிழின் தொன்மையைப் பற்றியே திருவாளர் வையாபுரிப்பிள்ளையவர்கட்கு ஒரு கருத்தில்லையென்பது, அவர்களெழுதிய 'ஆராய்ச்சியுரைத் தொகுதி'யால் அறியக்கிடக்கின்றது. அவர்கள் முடிபெல்லாம், மகன் தந்தையை ஒத்திருப்பதால் மகனே தந்தையைப் பெற்றவன் என்பது போன்றவையே. வடமொழியுட்பட, வடநாட்டு மொழிகள் எல்லாவற்றிலும், தனித்தமிழ்ச் சொற்கள் நூற்றுக் கணக்காகக் கலந்துள்ளன என்பதை, அவர் அறியார்போலும்! வடநாட்டில் தோன்றிய, பெளத்த மறைக்குச் சிறப்புப் பெயராய் வழங்கும் பிடகம் என்னும் சொல்லுங்கூட, பெட்டகம் என்னும் தமிழ்ச் சொல்லாயிருக்கும்போது, வேறென்ன சொல்ல வேண்டுவது? பிடகம் (பெட்டகம்) = பெட்டி, கூடை, தட்டு. கி.மு. 20ஆம் நூற்றாண்டிலிருந்த தொல்காப்பியருக்கு, கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமண மதத்தோடு எங்ஙனம் தொடர்பிருந்திருக்க முடியும்?