சான்றிதழ்
ix
இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்து கொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம்.
சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம்.
மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அவர் வருந்தியுழைத்து ஆராய்ச்சி செய்துவரும் அறிஞர் ஆதலால் அவரைப் பணியில் அமர்த்தும் எந்த நிலையத்துக்கும் அவரால் பேரும் புகழும் கிடைக்கப் பெறும் என்று யாம் முழு நம்பிக்கையோடு கூறுகின்றேம்.*
மறைமலையடிகள்
மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின்
தமிழாக்கம்.