உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

43

வரலாற்றுக்கும் உண்மைக்கும் பொருந்தாது. தனித்தமிழ்ப் புலவர்களான சங்கப் புலவர் காலத்திலேயே பிராகிருதச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன என்பதற்கு பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும் மணிமேகலை சிலப்பதிகாரக் காவியங்களும் சான்று பகர்கின்றன. இந்த வரலாற்று உண்மையை யறியாத சிலர், கடைச் சங்ககாலத்தில் வேறுமொழிச் சொற்கள் கலக்க வில்லை என்றும், தனித் தமிழ் வழங்கிற்று என்றும் கூறுவதும், மணிமேகலை, சிலப்பதிகாரக் காவியங்கள் சங்ககாலத்துக்குப் பிறகு சில நூற்றாண்டு கழித்து எழுதப்பட்டன என்று கூறுவதும் வரலாற்றுக்கும் உண்மைக்கும் பொருந்தாத சான்றுகளாகும். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு (பௌத்த, சமண மதங்களோடு) வந்த பாலி, சூரசேனி முதலான பிராகிருத மொழிச் சொற்கள் கலவாமல், கடைச் சங்கம் முடிகிற வரையில் காத்துக்கொண்டிருந்து, கி.பி, 3ஆம் நூற்றாண்டில் கடைச் சங்கம் முடிந்த பிறகு தமிழில் கலந்தது என்று கூறுவது மொழியின் இயற்கையும் வரலாற்று உண்மையும் அறியாதவர் கூறும் கூற்றாகும்.

சங்க காலத்திலேயே பிராகிருதம் போன்ற வடமொழிச் சொற்கள் பௌத்தத் தமிழரிடையே புகுந்து பொதுமக்களிடையேயும் பரவி விட்டது என்பதே வரலாற்று உண்மை. அதற்குச் சான்றாக இருப்பது பிராமிக் கல்வெட்டெழுத்துக்களில் காணப்படுகிற பிராகிருத மொழிச் சொற்கள்.

தமிழ்மொழி உயிருள்ள மொழி. நெடுங்காலமாக வழங்கி வருகிறமொழி. உலகத்திலே, வழங்கி வருகிற உயிருள்ள மொழிகள் எல்லாம் வாணிகம், சமயம், அரசாட்சி, கலை முதலியவற்றின் தொடர்பாக வேற்றுமொழிச் சொற்களையும் பெற்றுக் கொள்வது இயல்பு. இந்த இயல்புப்படி சங்க காலத்திலேயும் சமயத் தொடர்பு பற்றி (பௌத்தம், சமணம்) பிராகிருத மொழிச் சொற்கள் தமிழில் கலந்து விட்டன. இந்த வரலாற்று உண்மையை மறுக்க முடியாது. சங்க காலத்தில் அயல்மொழிச் சொற்கள் கலவாமல் தூய தமிழ் மட்டும் இருந்தது என்று கூறுவது பொருந்தாது. வடநாட்டுப் பௌத்தமும், சமணமும் வந்தபோதே அவர்களோடு பிராகிருத மொழியும் வந்து விட்டது. அவர்கள் வருவதற்கு முன்பு, வேறு மொழித் தொடர்பு இல்லாத காலத்தில், தூய தமிழ் வழங்கியது உண்மை. ஆனால், வேறு மொழிகளைச் சமய மொழியாகக் கொண்ட பௌத்தமும், சமணமும் தமிழகத்திலே வந்து (கி.மு. 3ஆம் நூற்றாண்டு வரை) 500