உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

-

அன என்றிருப்பது ஆன என்றிருக்க வேண்டும். இது கற்றச்சன் செய்த பிழை. தமம் என்றிருப்பது தம்மம் என்றிருக்க வேண்டும். இதன் பொருள் தர்மம் (அறம்) என்பது. ஈதா என்பது ஈந்தான் என்றிருக்கவேண்டும். இந்தத் தர்மத்தை ஈந்தவன் என்பது இதன் பொருள். நெடிஞ்சழியன் என்று எழுதப்பட்டிருப்பது நெடுஞ் செழியன் என்றிருக்கவேண்டும். செ என்னும் எழுத்தை ச என்று எழுதியிருக்கிறான் கற்றச்சன். ஸலகன் என்னும் சொல் பிராகிருத மொழிச் சொல். இதன் பொருள் தெரியவில்லை. ஐ. மகாதேவன் இதற்கு கசலன் (மைத்துனியின் கணவன்) என்று பொருள் கூறுகிறார். இது சரி என்று தோன்றவில்லை. கேசவன் (சேனைத் தலைவன்) என்னும் சொல் இப்படித் தவறாக எழுதப்பட்டதோ என்று ஐயமாக இருக்கிறது.

இளஞ்சடிகன். இது பாண்டியன் நெடுஞ்செழியனுடை சேவகன் பெயர். தந்தைய் என்னும் சொல்லின் ஈற்றில் யகரமெய் இட்டு எழுதப்பட்டிருக்கிறது. இகர ஈறு ஐகார ஈற்றுச் சொற்களின் இறுதியில் யகர மெய் இட்டு எழுதுவது அக்காலத்து வழக்கம். அதன் படி தந்தை என்னும் இச் சொல்லின் இறுதியில் யகரமெய் இட்டு எழுதப் பட்டிருக்கிறது. சடிகன் என்பது இளஞ்சடிகனுடைய தந்தையின் பெயர் செயிய என்பது செய்த என்னும் பொருள் உள்ளது. பளிய் என்பது ‘பள்ளி' என்பதன் திரிபு. இகர மெய்யீற்றுச் சொல்லாகையால் இதன் இறுதியில் யகரமெய் இட்டு எழுதப்பட்டிருக்கிறது. பள்ளி என்பது பௌத்த சைன சமயத்துத் துறவிகள் தங்கியிருக்கும் இடம்.

இது கல்வெட்டின் கருத்து இது: கணியரும் நந்தி என்னும் பெயரையுடையவருமான ஆசிரியருக்கு அறமாக இந்த மலைக்குகை கொடுக்கப்பட்டது. இதைக் கொடுத்தவன் (பாண்டியன்) நெடுஞ்செழியன். அரசனுடைய சேவகனாகிய இளஞ்சடிகனுடைய தந்தையான சடிகன் என்பவன் இந்தப் பள்ளியை (கற்படுக்கைகளை) அமைத்தான்.

கணி நந்தாசிரியர் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய குரு என்று தெரிகிறார். இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவன்.

அரிட்டாபட்டிக் கழுகுமலையில், இன்னொரு குகையில் இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டு இதே பாண்டியன் நெடுஞ்செழியனால் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டும் 1906ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.