உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

195

அடுத்த நாள் (27-5-61) நாங்கள் ஈரோடு நகரத்தில் ஒரு பழைய கோவிலைக் கண்டுபிடித்தோம். இந்தக் கோவில் பல்லவ அரசர் காலத்துக் கட்டட அமைப்புப்படி கட்டப்பட்டிருக்கிறது. மண்மூடிப் புதைந்து கிடந்த இந்தக் கோவில் சில காலத்துக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டதாம். மகிமாலீசுவரர் கோவில் என்பது இதற்குப் பெயர். இந்தக் கோவில் இருப்பது இதற்கு முன் அறிந்திருந்தாலும், இக் கோயில் பல்லவ அரசர் காலச் சிற்ப முறைப்படி அமைந்த பழைய கட்டடம் என்பதை ஒருவரும் இதுவரையில் அறியவில்லை.

நாங்கள் சென்று பார்த்தபோது, பல்லவர் காலத்துச் சிற்ப முறைப்படி அமைந்த பழைய கோவில் என்பதைத் தெளிவாக அறிந்தோம். மகாபலிபுரத்துத் “தர்மராச இரதம்” என்னும் கோவில் விமானம் போன்றது இந்தக் கோவிலின் விமானம். எட்டுப்படை விமானம். விமானத்தில் அமைந்துள்ள சாலை, பஞ்சரம், கர்ண கூடு முதலிய உறுப்புகளும் பல்லவர் காலத்துச் சிற்ப முறைப்படி அமைந்துள்ளன. துவாரபாலகர் திருவுருங்களும் பல்லவர் காலத்துச் சிற்ப முறைப்படி அமைந்துள்ளன. பல்லவர் காலத்துக் கோவில்களைப் போலவே இந்தக் கோவில் சுவர்களும் நான்கு அடி அகல முள்ளவை யாக உள்ளன. திருவுண்ணாழிகையில் (கர்ப்பக்கிருகத்தில்) உள்ள சிவலிங்கத் திருவுருவம் மகேந்திர வர்ம பல்லவ அரசன் காலத்துச் சிவலிங்கம் போன்றும் பெரிதாகவும் இருக்கின்றது.

இந்தக் கோவில் கர்ப்பக்கிருகமும் (திருவுண்ணாழிகையும்) விமானமும் பல்லவர் காலத்துக் கட்டடமாகும். இப்போதுள்ள மகா மண்டபம், முகமண்டபம், அம்மன் கோவில் ஆகியவை பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை. சுவாமியுள்ள க திருவுண்ணாழி கையின் வெளிப்புறத்தில் இருந்த துவாரபாலகர் உருவங்களைப் பிற்காலத்தில் மகாமண்டபத்து வாயில் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். கொங்கு நாட்டிலே பல்லவ அரசர் ஆட்சி பரவியதாகத் தெரிய வில்லை. ஆனால், பல்லவ சிற்பக்கலை அங்கும் பரவியிருந்தது என்பது இந்தக் கட்டடத்தினால் தெரிகிறது.

ஈரோட்டிலுள்ள

இந்த மகிமாலீசுவரர் கோவிலையும் பழம்பொருள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரசாங்கத்தார் பாதுகாக்க வேண்டுகிறோம்.