உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சமணசமயம் சிறப்படைந்த வரலாறு

பண்டைக் காலத்திலே சமணசமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலைபெற்றிருந்தது. பரவியிருந்தது மட்டுமல்லாமல் செல்வாக்குப் பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ்நாட்டிலே வேரூன்றித் தழைத்துத் தளிர்த்து இருந்ததைக் தேவாரம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பிற்காலத்து நூல் களும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்க காலத்து நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலே ஆங்காங்குக் காணப்படுகிற கல்வெட்டுச் சாசனங்களும், அழிந்தும் அழியாமலும் காணப் படுகிற சமணக்கோயில்களும், காடுமேடுகளில் ங்காங்கே காணப் படுகிற சமணசமயத் தீர்த்தங்காரர்களின் திருவுருவங்களும் சான்று கூறுகின்றன. சமணசமயம் தமிழ்நாட்டிலே ஏன் செல்வாக் கடைந்தது? ஏன் செழித்து வளர்ந்தது.

பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை பண்டைக்காலத்தில் சமணசமயத்தில் இல்லை. எக்குலத்தவனாயினும், தமது சமயக் கொள்கையைப் பின்பற்றுவனாயின் அவனைச் சமணர் போற்றி வந்தனர். அவருடைய அருங்கலச் செப்பு என்னும் நூலிலே, “பறையன் மகனெனினும் காட்சி யுடையான் இறைவன் எனஉணரற் பாற்று

என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, பண்டைக்காலத்திலே சாதிபேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதி பேதம் பாராட்டாத சமண சமயம் பரவியதில் வியப்பில்லை. மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கினையும் அன்ன தானம், அபய தானம், ஒளடத தானம், சாத்திர தானம் என்று கூறுவர். உணவு இல்லாத ஏழை மக்களுக்கு உண்டி கொடுத்துப் பசிநோயைப் போக்குவது தலைசிறந்த அறம் அன்றோ? ஆகவே, அன்னதானத்தை முதல் தானமாகச் செய்து வந்தனர்.