உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

உணவு தானத்தைமட்டும் சிறிதளவு பெற்று வந்தார்கள். தங்கள் மதக் கொள்கைகளை மறைக்காமல் சாதிபேதமன்றி எல்லோருக்கும் போதித்து வந்தார்கள். தங்கள் பள்ளிகளில் நாட்டுச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்துக் கொடுத்தனர். நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து கொடுத்து நோய் தீர்த்தனர். இவர்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டவில்லை. கொலையையும், புலாலுண்பதையும் இவர்கள் முழுவதும் நீக்கியிருந்தார்கள். இவ்வித விரிந்த தாராளமான மனப்பான்மையும் கொள்கையும் உடைய பௌத்த சமண மதங்கள் நாட்டில் செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்தன.

ஆனால், இந்த இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்க வில்லை. பெளத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன. சிலகாலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்குக் குன்றிவிட்டது. பௌத்த மதத்தில் சில பிரிவுகள் ஏற்பட்டுப் பிளவுபட்டு வலிமை குன்றிக் கடைசியில் செல்வாக்கிழந்துவிட்டது. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் (கி.பி. 753இல்) சமண சமய குருவான பேர் பெற்ற ஆசாரிய அகளங்கர்4 காஞ்சீபுரத்தில் பௌத்தக் கோவிலாக இருந்த காமாட்சி - அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள் இலங்கைக்குச் சென்றுவிட்டனர். இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழ் நாட்டிலே வைதீகம் பௌத்தம் என்னும் மதங்கள் பின்னடைந்துவிடச் சமண மதம் செல்வாக்குப் பெற்றுச் சிறப்புற்றிருந்தது.

செல்வாக்குப் பெற்றிருந்த சமணசமயம் நெடுங்காலம் சிறப்புட னிருக்க முடியவில்லை. சிலகாலஞ் சென்ற பின்னர்ச் சமணசமயத்தின் செல்வாக்குக் குறையத் தொடங்கிற்று. இதற்குக் காரணம் யாதெனின், புதிதாகத் தோன்றிய ‘இந்து' மதமும் ‘பக்தி’ இயக்கமுந்தான். இப்புதிய 'இந்து' மதம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆராய்வாம்.

பண்டைக் காலத்தில், வடநாட்டினின்று சமணம், பௌத்தம், வைதீகம் முதலிய மதங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னரே, தமிழர் ‘திராவிட’ மதத்தைக் கொண்டிருந்தனர் என்று முன்னர்க் கூறினோம் அன்றோ? அந்தத் திராவிட மதம் என்பது முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை வணங்கும் வழிபாடு ஆகும். அக் காலத்து வைதீகப் பிராமணர் தம் வேள்விகளில் ஆடுமாடுகளைக் கொன்றுவந்தது போலவே, அந்தக் காலத்துத் தமிழரும் முருகன்,