உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்

சமணசமயக் கொள்கைகளில் சில இப்போதும் இந்து மதத்தில்' காணப்படுகின்றன. சமணசமயக் கொள்கைகள் இரண்டு வழியாக இந்து மதத்தில் சேர்ந்திருக்கவேண்டும். இந்துமதம் மேலோங்கிச் சமண சமயம் குன்றியபோது, சமணர்கள் இந்து மதத்தை மேற்கொண்டு இந்துக்களாக மாறியபோதிலும், தாம் முன்பு மேற்கொண்டிருந்த சமண சமயக் கொள்கைகளையும் விடாமல் ஒழுகி வந்தது ஒன்று. சமண சமயத்தை அழித்த இந்து மதம், சமண சமயத்தின் சிறந்த கொள்கைகள் சிலவற்றைத் தன் கொள்கையாக ஏற்றுக்கொண்டது மற்றொன்று. இவ்வாறு இரண்டு வழிகளில், சமணசமயக் கொள்கைகள் இந்து மதத்தில் கலந்துவிட்டன. இந்துமதத்தில் காணப்படுகிற சமணசமயக் கொள்கை களை ஆராய்வோம்.

ஊன் உண்ணாமை :

இந்தக் கொள்கையை இந்து மதம் சமணசமயத்தினிடமிருந்து பெற்றுக் கொண்டது. பண்டைக் காலத்தில் தமிழர், முருகன் கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிட்டு வணங்கியதோடு, ஊன் உணவையும் உட்கொண்டு வந்தனர். இதற்குச் சங்க நூல்களே சான்றாகும். ஆரியரும் (பார்ப்பனரும்) பண்டைக் காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களுக்கு ஆடு, மாடு, குதிரை முதலியவற்றைக் கொன்று பலியிட்டு வந்ததோடு புலா லுணவைப் புசித்து வந்தனர். ஆரியப்பார்ப்பனர் ரிஷிகளுக்கு விருந்து செய்யும் போதும், சிராத்தம் செய்யும் போதும் கன்றுக்குட்டி, ஆடு, மான், முயல், உடும்பு முதலிய பிராணிகளின் மாமிசத்தைச் சமைத்து உண்டனர். எத்தனைவகை மாமிச உணவைச் சமைக்கிறார்களோ அத்தனை உயர்வாக மதிக்கப்பட்டது அவர்களுடைய விருந்து. இதற்கு அவர்களுடைய வேதம் இதிகாசம் முதலிய நூல்களே சான்றாகும். இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மீன் மாமிசம் முதலிய புலால் உணவை உண்டுவருவது கண்கூடு. சமண சமயம் நமது நாட்டிலே பரவிச் செல்வாக்கடைந்திருந்த போது அது ஊன் உண்பதைத் தடுத்து வந்தது. ஊன் உண்பவரும் பிராணிகளைக் கொல்கின்றவரும்