உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

பல்லவ மன்னவர்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட மயிலை சீனி அவர்கள், அக்காலத்திய பக்தி இலக்கியங்கள் குறித்தும் ஆய்வு செய்திருக்கிறார். பல்லவ மன்னர்கள் ஒவ்வொருவர் காலத்திலும் எழுதப்பட்ட பக்திப் பாடல்கள் எவையெவை என்பது குறித்து இவர் செய்துள்ள ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேவாரத்தில் காணப்படும் பல்வேறு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சமணர்களும் பௌத்தர்களும் எவ்வகையில் சைவர்களால் ஆதிக்கம் செய்யப்பட்டனர் என்பதை விரிவாகப் பதிவுசெய்துள்ளார். தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் செய்திகளைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட சமயங்களின் வரலாற்றை மிக விரிவாக ஆய்வு செய்தவர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள். இந்தத் தொகுதியில் சைவ சமயம் எவ்வாறெல்லாம் செயல்பட்டது என்பது குறித்த தகவல்களை ஆழ்வார் பாடல்கள் மற்றும் நாயன்மார் பாடல்கள் மூலம் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் சமணம் மற்றும் பௌத்தம் தொடர்பான ஆய்வுகள் குறித்து அறிந்த அளவிற்கு அவரது சைவ சமயம் குறித்த ஆய்வை தமிழுலகம் அறிந்திருக்கவில்லை. இத்தொகுதியின் மூலம் அவரது சைவ சமயம் தொடர்பான ஆய்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் பண்டைத் தமிழ் நூல்களின் கால ஆய்வுகள் பற்றிய விரிவான உரையாடல்கள் நிகழ்ந்த பொழுது அதில் பங்குபெற்றவர்களில் சீனி வேங்கடசாமி அவர்களும் குறிப்பிடத்தக்கவர். ஆனால், பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை மா. இராசமாணிக்கனார், தேவநேயப் பாவாணர், ஆகிய பிறர் செய்த கால ஆய்வுகள் குறித்து தமிழுலகம் அறிந்த அளவிற்கு மயிலை சீனி அவர்களின் கால ஆய்வை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இத்தொகுதியில் அவரது காலஆய்வுகள் குறித்த விரிவான தகவல்கள் பதிவாகியுள்ளன. தர்க்கப் போக்கில் தமிழ்நூல்களின் காலத்தை நிர்ணயம் செய்தவர்களில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுக்கு முக்கியமான டமுண்டு என்று கூறமுடியும்.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

சென்னை - 96

ஏப்ரல் 2010

வீ. அரசு

தமிழ்ப் பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம்