உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஆருகத மகத்தை ‘இந்து மதத்தில்

சேர்க்க முயன்றது

புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று கூறிப் பௌத்த மதத்தை ‘இந்து மதத்தில்' சேர்த்துக்கொண்டு பின்னர், காலப் போக்கில் அந்த மதத்தை அழித்து விட்டது போல, சமண மதத்தையும் “இந்து” மதத்தில் இணைத்துக் கொள்ள ‘இந்துக்கள்’ பண்டைக் காலத்தில் முயன்றனர். இதன் பொருட்டு, திருமால் சமண மதத்தைப் போதித்ததாகக் கதை கற்பித்துக் கொண்டனர். சமண மதத்தை ‘இந்து’ மதத்தின் கிளைமதமாக இணைத்துக் கொள்ள அவர்கள் செய்த முயற்சிகள் சில புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வோம்.

விஷ்ணுபுராணத்தில் கீழ்க்கண்ட கதை கூறப்படுகிறது: அசுரர்க்கும், தேவர்க்கும் நடைபெற்ற போரில் அசுரர் தேவரை வென்றனர். தோற்று ஓடிய தேவர் பாற்கடலின் வடபுறஞ் சென்று ஆங்குத் திருமாலை வணங்கித் தமது தோல்வியைக் கூறி, அசுரரை வெற்றி கொள்ளத் தமக்கு உதவி செய்யுமாறு அவரை வேண்டிக் கொண்டனர். தேவரது வேண்டுகோளுக்கிணங்கிய திருமால் அவருக்கு உதவி செய்ய உடன்பட்டுத் தமது உடலினின்று மாயா மோகர் என்பவரை உண்டாக்கி, அசுரரை மயக்கி வரும்படி அனுப்பினார். அக்கட்டளைப் படியே சென்ற மாயாமோகர், தம் உடைகளைக் களைந்து தலையை மழித்துக் கையில் மயிற்பீலி பிடித்து அசுரர் வாழ்ந்திருந்த நருமதை' ஆற்றங்கரைக்குச் சென்று அவ்வசுரருக்கு நக்ன (சமண) மதத்தைப் போதித்து அவரை ஆருகதர் ஆக்கினார். பின்னர், மாயாமோகர் செம்பட்டாடை (சீவரம்) அணிந்து எஞ்சி நின்ற அசுரர்க்கு அகிம்சையை (பௌத்த மதத்தைப்) போதித்து அவரைப் பௌத்தராக்கினார். இவ்வாறு அசுரர் வேத மதத்தை (வைதீக மதத்தை)க் கைவிட்டுத் தமது ஆற்றல் குன்றினர் குன்றவே தேவர், அசுரரைப் பொருது வென்றனர்.

இக்கதையில் அசுரர் என்பது சமண பௌத்த மதத்தினரை என்பதும், தேவர் என்பது வைதீகப் பிராமணரை என்பதும் விளங்குகின்றது. சமண பௌத்த மதங்களைத் திருமால் உண்டாக்கினார் என்று கதை கற்பித்து 'இந்து மதத்துடன் இந்த மதங்களையும் இணைத்துக் கொள்ளச் செய்த சூழ்ச்சி இக்கதையில் காணப்படுகிறது.

1