உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

199

மச்சபுராணம் இதே கதையைச் சிறிது மாற்றிக் கூறுகிறது: ரசி என்பவரின் மக்கள் கடுந்தவஞ் செய்து பேராற்றல் பெற்றனர். ஆற்றல் பெற்ற அம்மக்கள் இந்திரனோடு போர்செய்து வென்று அவனது தேவ லோகத்தைக் கைப்பற்றியதோடு, அவன் யாகத்தில் பெறுகின்ற அவிப் பாகத்தைக் பெறாதபடியுந் தடுத்து விட்டனர். தோல்வியடைந்து உரிமை யிழந்த இந்திரன் பிரகஸ்பதியிடஞ் சென்று, தனது தோல்வியைக் கூறிப் பண்டைய உயர் நிலையை மீண்டும் பெறத் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரை வணங்கி வேண்டினான். பிரகஸ்பதி அவனது வேண்டு கோளுக்கிணங்கி அவனுக்கு உதவி செய்ய உடன்பட்டார். அவர் ரசியின் மக்களிடஞ் சென்று அவர் களுக்கு அவைதிக (சமண பௌத்த) மதங்களைப் போதித்தார். அவரும் அதனைப் பெற்றுக்கொண்டு வைதீக மதத்தைக் கைவிட்டனர். இதன் காரணமாக அவர்கள் வலிமை குன்ற, இந்திரன் அவர்களைப் பொருது வென்றான்.

தேவீபாகவதம் என்னும் நூலிலும் இக்கதை கூறப்பட் டுள்ளது. இதில் காணப்படும் சிறு மாறுதல் யாதெனின், அசுரரின் குருவாகிய சுக்கிராசாரியார் வெளியூருக்குச் சென்றிருந்தபோது, பிரகஸ்பதி சுக்கிராசாரியார் போன்று உருவம் எடுத்து அசுரரிடஞ் சென்று அவருக்குச் சமண மதத்தைப் போதித்தார் என்பதே.

விஷ்ணு புராணம், மச்சபுராணம், தேவி பாகவதம் இவற்றிற் கூறப்பட்ட இக்கதைகளைத் திரட்டிச் சேர்த்து, திருமாலின் கூறாகிய மாயாமோகர் சமண பௌத்த மதங்களைப் போதித்தார் என்று பதும புராணம் கூறுகின்றது.

அக்கினி புராணம் கூறுவதாவது: தைத்தியருக்கும் தேவருக்கும் நடைபெற்ற போரில் தைத்தியர் தேவரை வென்றனர். தோல்வியுற்ற தேவர் திருமாலிடஞ் சென்று அடைக்கலம் புகுந்து முறையிட்டுத் தமது குறையை நீக்குமாறு அவரை வேண்டினர். அதற்கிணங்கிய திருமால் சுத்தோதனருக்கு மாயாமோகம் என்னும் மகனாகப் பிறந்து தைத்தியரை மயக்கி அவரைப் பௌத்தராக்கினார். எஞ்சி நின்ற தைத்தியருக்கு மாயையைப் போதித்து அவரை ஆருகதராக்கினார். இவ்வாறு சமண பௌத்த மதங்கள் உண்டாயின என்று இப்புராணம் கூறுகின்றது.

காஞ்சிமகாத்மியம் என்னும் நூலிலும் இது போன்ற கதை கூறப்பட்டுள்ளது. (19ஆம் அத்தியாயம்.) தாரகன் மக்களான