உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

39

என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லாக இருக்கும்போது. முகுர்த்தம் என்னும் பொருள் உள்ள ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியாக இருக்கவேண்டிய காரணம் என்ன? இராசி என்று பொருள் உள்ள ‘ஹோரா' என்னும் கிரேக்க மொழிச் சொல் தமிழில் வந்து ஓரை என்று வழங்குகிறது என்று கூறப்படுகிறது. இச்சொல் கிரேக்க மொழியி லிருந்து வந்த சொல்லா என்பது ஐயமாக இருக்கிறது.

கிரேக்க மொழிச் சொற்கள் சில தமிழ் மொழியில் கலந்து வழங்குவது உண்மைதான். மத்திகை, சுருங்கை, கலம், கன்னல் முதலிய சொற்கள் கிரேக்க மொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்குகிற சொற்கள். இச்சொற்கள் சங்க நூல்களிலேயே வழங்கப்படுகின்றன. மத்திகை என்பது குதிரை ஓட்டும் சம்மட்டி என்னும் பொருளுள்ள சொல். சுருங்கை என்பது தரையின் கீழே அமைக்கப்படும் சாக்கடை (கரந்து படை) என்னும் பொருள் உள்ளது. கலம் என்பது கப்பல் என்னும் பொருளுடைய சொல். Kalon என்பதற்குக் கிரேக்க மொழியில் ‘மரவீடு' என்பது பொருள். இச்சொல்லைக் கப்பல் ஓட்டிகளான கிரேக்கர் கப்பல் என்னும் பொருளில் வழங்கினார்கள். கிரேக்கரிட மிருந்து தமிழர் இச்சொல்லையும் கடன் கொண்டனர். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னோடு வந்து கறியொடு பெயரும்' என்று அகநானூறும் (149), 'யவனர், நன்கலம் தந்த தண்கமழ்தேறல்' என்று புறநானூறும் (56) கூறுகின்றன. மண் பாத்திரம் என்னும் பொருள் உள்ள கலம் என்னும் சொல்லும் தமிழில் உண்டு. (இந்தக் கலம் என்னும் தமிழ்ச் சொல்லையும் கலம் என்னும் கிரேக்கச் சொல்லையும் வேறு பிரித்து அறியும் பொருட்டு மண், மரம் என்னும் அடைமொழி கொடுத்து மட்கலம், மரக்கலம் என்று பிற்காலத்தவர் வழங்கினார்கள்.) கன்னல் என்பது பொழுதை அளக்கும் கருவிக்குப் பெயர். Khronos என்னும் கிரேக்க மொழிச் சொல் கன்னல் என்று வழங்குகிறது என்பர். இவை தமிழில் வழங்கும் கிரேக்க மொழிச் சொற்கள்.

கி.பி. முதல் நூற்றாண்டிலேயே கிரேக்கராகிய யவனர் கடல் வழியாகக் கப்பலில் வந்து தமிழ் நாட்டுடன் வாணிகஞ் செய்யத் தொடங்கினார்கள். அந்த வாணிகம் நாளுக்கு நாள் அதிகப்பட்டது. கி.பி. 45ஆம் ஆண்டில், ஹிப்பலஸ் என்னும் பெயருள்ள கிரேக்க மாலுமி, தென்மேற்குப் பருவக் காற்றின் உதவியினால் சுருங்கிய காலத்தில் முசிறித் துறைமுகத்துக்கு வந்து போகலாம் என்பதைக் கண்டு பிடித்த பிறகு, யவன - தமிழர் வாணிகம் மேலும் அதிகமாகப்