உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

47

சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்டார்கள் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகிறார்கள். காலத்தை அறுபது என்னும் எண்ணினால் அளந்தவர் பாபிலோனியரே. இப்போது உலகம் முழுவதும் வழங்குகிற 60 வினாடி ஒரு நிமிஷம், 60 நிமிஷம் ஒரு மணி நேரம் என்னும் காலக் கணிதம் பாபிலோனியரிடமிருந்து ஏனைய மக்கள் கற்றுக்கொண்டவை என்று ஆராய்ச்சி அறிஞர்கள் எல்லோரும் கூறுகிறார்கள். ஏன்? நமது தமிழ் நாட்டிலும், பாரதநாட்டிலும் முற்காலத்தில் வழங்கிவந்த 60 நாழிகை ஒரு நாள் என்னும் காலக்கணக்கும் பாபிலோனியரிடமிருந்து கற்றுக் கொண்டதே. அல்லும் பகலும் அறுபது நாழிகை என்னும் பழமொழியும் நமது நாட்டில் வழங்குகிறது. 60 என்னும் எண்ணினால் காலத்தை ஆதி காலத்தில் அளந்தவர் பாபிலோனியரே. பன்னிரண்டு இராசிகளையும் கண்டு பிடித்த ஆதிகாலத்து மக்களும் பாபிலோனியர் என்று சரித்திரம் அறிந்தவர் கூறுகின்றனர்.

இவ்வாறு இராசிகளைக் கண்டுபிடித்து காலத்தை வரையறுத்த பாபிலோனிய (சுமேரிய மொழியிலிருந்து ஓரை என்னுஞ் சொல்லைத் தமிழர் பெற்றிருக்கக்கூடும். அதுபோலவே, கிரேக்கரும் சுமேரியரிட மிருந்து ஹோரா என்னுஞ் சொல்லைப் பெற்றிருக்கலாம்.

கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் கிரேக்க மொழியிலிருந்து ஹோரா என்னுஞ் சொல்லை சமஸ்கிருத மொழி ஏற்றுக்கொண்ட பிறகு, சமஸ் கிருதத்திலிருந்து அச்சொல்லைத் தமிழ் மொழி ஏற்றுக்கொண்டது என்று வையாபுரியாரும் சிவராசரும் கூறுவது வரலாற்று உண்மைக்கு மாறுபட்டதாகும். இது சமஸ்கிருத மூடபக்தியுள்ளவரின் பொருளற்ற கூற்றாகும்.

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் என்னும் சூத்திரத்தில் வருகிற ஓரை என்பதற்கு, நச்சினார்க்கினியரும் இளம்பூரணஅடிகளும் ஆகிய பிற்காலத்து உரையாசிரியர்கள், இராசி அல்லது முகூர்த்தம் என்று பொருள் கூறுவது பொருத்தமன்று என்றும், ஓரை என்பதற்கு விளையாட்டு என்பதே செம்பொருள் ஆகும் என்றும் பேராசிரியர் S.சோமசுந்தர பாரதியார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துச் சஞ்சிகையில் (ஆறாந்தொகுதி 142, 143 ஆம் பக்கங்களில்) "தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னுந் தலைப்பில் எழுதியுள்ளது ஈண்டு கருதத்தக்கது. அவர் எழுதியிருப்பதை ஈண்டுத் தருகின்றேன்: