உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

6

/61

பிற்பட்ட நூல் என்று கூறினார். வடமொழி அறிஞர்கள் பெரும் பாலோரும் பரதநாட்டிய சாஸ்திரம் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். வையாபுரிப் பிள்ளையும், அந்நூல் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தென்பதைத்தான் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், சாஸ்திரி, கி. மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பரத சாஸ்திரம் எழுதப்பட்டது என்று தகுந்த சான்று காட்டாமல் கூறுகிறார். மேலும், தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரக் கருத்துக்கள் பரத நாட்டிய சாஸ்திரத்தில் காணப்படுவதால், கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தொல்காப்பியத்துக்கு முன்பு பரத சாஸ்திரம் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று கூறுகிறார். இது ஒரு சான்றாகுமா? இவர் கூறுவதையே மாற்றிக் கூறலாமல்லவா? தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் பரத சாஸ்திரத்தில் காணப்படுவதனாலே, பரத சாஸ்திரம் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்ட நூல் என்று கூறுவது பொருந்தும் அல்லவா? ஆனால் இப்படி எல்லாம் மனம் போனபடிக் கூறுவது ஆராய்ச்சியாகுமா? பரதநாட்டிய சாஸ்திரம் கி.பி. 4ஆம் நூற்றாண்டு நூல் என்று பலரும் கருதுவதனால், சாஸ்திரி வெறும் யூகமாகக் கூறுவதை உண்மைஎன்று ஏற்றுக்கொள்ள முடியாது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு நூலாகிய பரத சாஸ்திரத்திலிருந்து, அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட நூலாகிய தொல்காப்பியம் கருத்துக்களை எடுத்திருக்க முடியாது. அதற்கு மாறாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தொல்காப்பியத்திலிருந்து பிற்காலத்து (கி.பி. 4ஆம் நூற்றாண்டு) நூலாகிய பரத நாட்டிய சாஸ்திரம் சில கருத்துக்களை (மெய்ப்பாட்டுச் சூத்திரங்களை) எடுத்திருக்கக் கூடும் என்பது பொருத்தமானது.

இனி, வையாபுரியார் கூற்றை ஆராய்வோம். இவர், பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டு, தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் பரத நாட்டிய சாஸ்திரச் சூத்திரங்களுடன் பொருந்தியிருப்பதனால், தொல் காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் பரத நாட்டிய சாஸ்திரத்தி லிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆகவே தொல்காப்பியம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஏன், அப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்குக் காரணமோ சான்றோ காட்டவில்லை.