உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

நாடெங்கும் பரவி நாட்டில் அமைதியில்லாமற் போயிற்று. பொருளுக் கும் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாமற் போயிற்று. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்னும் கதையாயிற்று. 15-ஆம் நூற்றாண்டு முதல் 19– ஆம் நூற்றாண்டு வரையில் இந்தக் குழப்பங்களும், கலகங்களும், போர்களும், அராஜகமும் நாட்டில் இருந்தன. அந்தக் குழப்பக் காலத்தில் சைவ சமயத்தைப் போற்றிப் பாதுகாத்தவர்கள் மடாதிபதிகளே. திருவாவடுதுறை ஆதீனம்; திருப்பனந்தாள் ஆதீனம், தருமபுர ஆதீனம் முதலிய ஆதீனங்களின் மடாதிபதிகள் அக்காலத்தில் சைவ சமயத்தைப் போற்றி வளர்த்தார்கள்.

பின்னர், 19-ஆம் நூற்றாண்டிலே நாட்டில் புதிய ஆட்சி ஏற்பட்டு அமைதியும் பாதுகாப்பும் நிலைத்தன. ஆங்கில ஆட்சி அந்நிய ட்சியாக இருந்தபோதிலும் நாட்டிலே அமைதியும், பொருளுக்கும், உயிருக்கும், பாதுகாப்பும் நம்பிக்கையும் நிலைநாட்டப்பட்டன. ஆனால், இந்தக் காலத்தில் பல கோவில்கள் பழுதடைந்துகிலமாய்க் கிடந்தன. அதற்குக் காரணம் முன்னைய நூற்றாண்டுகளில் இருந்த குழப்பக் காலத்தில் கோவில்கள் பழுது பார்க்கப்படாதது தான். பழுதடைந்து கிலமாகிக் கிடந்த கோவில்களை புதுப்பித்துப் புதிதாகக் கட்டியவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார் மரபைச் சேர்ந்த பிரபுக்களேயாவர். சென்ற நூற்றாண்டிலே நாட்டுக்கோட்டை நகரச் செட்டியார்கள் பல இலட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து புதுப்பித்துக் கட்டிய கோவில்கள் பல, சென்ற நூற்றாண்டில் அவர்கள் சைவ சமயத்துக்குச் செய்த பெருந் தொண்டுகள் பற்பல.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து மத அறநிலைய பரிபாலனச் சட்டம் அமைக்கப்பட்டு அதன் பலனாக இந்துமதக் கோவில் பரிபாலன போர்டு என்னும் அலுவலகம் ஏற்படுத்தப் பட்டுக் கோவில் பரிபாலனங்கள் முறையாக நடைபெற்று வருகின்றன. இந்தப் போர்டில் சைவ சமயக் கோவில்களும் அடங்கியுள்ளன.

இது இரண்டாயிரம் ஆண்டுகளாக உள்ள சைவ சமயத்தின் சுருக்கமான வரலாறு. விரிவாக எழுதினால் இடம் பெருகும் ஆகையினாலே மிகச் சுருக்கமாக எழுதப்பட்டது.