உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

மதத்தில் வருணன் வணக்கம் கூறப்படவில்லை. வருணன் வணக்கம் பௌத்தருக்குரியதன்று. பௌத்த மதத்துக்கு உரிய கடல்தெய்வம் மணிமேகலை ஆகும். ஆனால், மணிமேகலைக்குக் கோயில் அமைத்து வழிபாடு செய்யப்படவில்லை. பௌத்த நாடாகிய இலங்கைத் தீவிலும் மணிமேகலைக்குக் கோயிலும் வழிபாடும் கிடையாது. வருணன் என்னும் கடல் தெய்வத்துக்கு மட்டும் இலங்கை யில் கோயிலும் வழிபாடும் உண்டு. அப்படியானால், இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளாகப் பௌத்த நாடாக இருந்துவருகிற இலங்கைத்தீவிலே வருணன் வணக்கம் எப்போது நுழைந்தது?

இலங்கைத் தீவு முன் ஒரு காலத்தில் தமிழ் நாட்டுடன் இணைந் திருந்தது. பின்னர் அவ்வப்போது கடற் பெருக்கு ஏற்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நிலம் உடைப்புண்டு இலங்கை தனித் தீவாகப் பிரிந்துபோய்விட்டது. இச்செய்தியை நில நூல் வல்ல அறிஞர்கள் கூறுகிறார்கள். இலங்கை நூல்களாகிய மகாவம்சம், தீபவம்சம் என்னும் நூல்களும், வெவ்வேறு காலத்தில் இலங்கையில் நிகழ்ந்த இரண்டு பெரிய கடல்கோள்களைக் கூறுகின்றன. இலங்கையின் மேற்குப் பகுதியில் இருந்த நிலப்பரப்பு இரண்டு பெரிய கடல் கோள்களினால் அழிந்துபோயின என்றும். ஆயிரக்கணக்கான ஊர்கள் கடலில் மூழ்கிவிட்டன என்றும் அந்நூல்கள் கூறுகின்றன. பண்டைத் தமிழ் நூல்களும், கன்னியாகுமரிக்குத் தெற்கே நிலப்பரப்பு இருந்தது என்றும் அங்குப் பாண்டியனுடைய தலைநகரங்கள இருந்தன என்றும் பிற்காலத்தில் இரண்டு பெரிய கடல் கோள்களினால் அந்நிலப்பரப்பு கடலில் மூழ்கி மறைந்து விட்டது என்றும் கூறுகின்றன. இந்த மூன்று செய்திகளையும் இணைத்து ஆராய்ந்து பார்க்கும்போது, இலங்கைத் தீவும் வேறு சில நிலப்பகுதிகளும் முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டுடன் இணைந்திருந்தன என்றும், பின்னர் அவ்வப்போது நிகழ்ந்த கடல் கோள்களினால் சில பகுதிகள் கடலில் முழுகி மறைந்தும் ஒரு பகுதி இலங்கைத் தீவாகப் பிரிந்தும் போயிற்று என்றும் தெரிகின்றன. இது நிகழ்ந்தது ஏறக்குறைய இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும்.

இலங்கை தனித் தீவாகப் பிரிந்துபோவதற்கு முன்னே, அது தமிழ் நாட்டுடன் சேர்ந்திருந்த காலத்தில், தமிழருடைய பழைய தெய்வமாகிய வருணன், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களின் வழிபாடுகள் அங்குப் பரவியிருக்க வேண்டும். அக்காலத்தில் சிங்கள