உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

233

மாமல்லை என்னும் மாமல்லபுரம் பல்லவ அரசர்களின் துறைமுகப்பட்டினம். ஆகவே இங்குப் பல்லவ இளவரசர்கள் வாழ்ந்திருந்தார்கள். தந்தையாகிய மகேந்திரவர்மன் காலத்தில், இளவரசனாயிருந்த நரசிம்மவர்மன் இந் நகரத்தில் வாழ்ந்திருந்தான். நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்னும் சிறப்புப்பெயரும் உண்டு. இவன் காலத்துக்கு முன்பு இத் துறைமுகப்பட்டினத்துக்கு மாமல்லபுரம் என்னும் பெயர் இல்லை. வேறு பெயர் இருந்தது. மாமல்லன் காலத்தில் இவ்வூருக்கு இவன் பெயர் சூட்டப்பட்டு மாமல்லபுரம் என்று அழைக்கப்பட்டது. மாமல்லபுரம் மாமல்லை என்று சுருக்கமாக வழங்கப்பட்டது. தமது செய்யுளிலே மாமல்புரத்தைக் குறிப்பிடுகிற படியால், பூதத்தாழ்வார் மாமல்லன் காலத்திலாவது அவன் காலத்திற்குப் பின்னராவது வாழ்ந்திருக்கவேண்டும்.

ழூவோ தூப்ராய் அவர்கள் தமது ‘பல்லவர் பழமை' என்னும் நூலிலே, நரசிம்வர்மன் தன் சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரினால் மாமல்லபுரத்தைப் புதிதாக உண்டாக்கினான் என்று கூறுகிறார்.2 இவர் கூறுவதுபோல மாமல்லன் புத்தம்புதிதாக இவ்வூரை உண்டாக்கவில்லை. இவ்வூரின் பழைய பெயரை மாற்றித் தன் பெயரைச் சூட்டினான். அரசர்கள், ஊரின் பழைய பெயரை மாற்றித் தமது பெயரைச் சூட்டுவது மரபு. இதற்குச் சாசனங்களில் பல சான்றுகள் உள்ளன.

மாமல்லபுரம் சங்ககாலம் முதல் வேறு பெயருடன் இருந்து வந்ததென்றும், பெரும்பாணாற்றுப்படையில் கூறப்படுகிற நீர்ப்பெயற்று அல்லது நீர்ப்பெயர்த்து என்பது அதன் பழைய பெயர் என்றுங் கூறுவர்.3 நீர்ப்பாயல் என்று இவ்வூருக்குப் பெயர் இருந்ததென்றும் அப் பெயரையே பிற்காலத்தவர் ஜலசயனம் என்று வழங்கினார்கள் என்று கருதுவோரும் உளர். கடல்மல்லை என்பது இதன் பழைய பெயர் என்றும், பிறகு மாமல்லன் தன் பெயரை இட்டு மாமல்லபுரம் என்று வழங்கினான் எனக் கூறுவோரும் உளர்.

இதன் பழைய பெயர் எதுவாக இருந்தாலும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்த முதலாம் நரசிம்வர்மனால் மாமல்லபுரம் என்னும் புதியபெயர் இடப்பட்டதென்பதில் சிறிதும் ஐயமில்லை. பூதத்தாழ்வார்