உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தேவார ஆராய்ச்சி*

சொல்லோவியம்

ஓவியப் புலவன் பலவித நிறங்களைக்கொண்டு பலவிதக் காட்சிகளையும் கருத்துக்களையும் படம் எழுதிக் காட்டுகிறான். சிற்பக் கலைஞன், சுதை மரம் உலோகம் முதலிய பொருள்களைக் கொண்டு உருவக் காட்சிகளைச் சிற்பக் கலையில் அமைத்துக் காட்டுகிறான். நாவன்மை படைத்த காவியப் புலவன், தான் கண்ட காட்சிகளையும் கருதிய எண்ணங்களையும் சொற்களில் அமைத்துச் செய்யுளாகவும் வசனமாகவும் தருகிறான். ஓவியப் புலவனும் சிற்பக் கலைஞனும் அமைத்துக் காட்டிய ஓவியங்களையும் சிற்ப உருவங்களையும் கண்களால் கண்டு மகிழ்கிறோம். ஆனால், காவியப் புலவன் அமைத்துக் கொடுத்த சொல்லோவியங்களைப் படித்து அல்லது பிறர் படிக்கக் கேட்டு, மனக் கண்ணில் கண்டு மகிழ்கிறோம்.

சிறந்த செந்தமிழ்ப் புலவராகிய சுந்தரமூர்த்தி நாயனார், தமது தேவாரப் பதிகங்களில் சொல்லோவியங்களை அமைத்துக் காட்டுகிறார். அவற்றில் சில இயற்கைக் காட்சிகளாக மிளிர்கின்றன; சில இயற்கையும் செயற்கையும் அமைந்த காட்சிகளாக விளங்குகின்றன. அச் சொல் ஓவியக் காட்சிகளிற் சிலவற்றைக் காண்போம்.

கானாட்டு முள்ளூர் இயற்கை வளம் நிறைந்த அழகான ஊர். கொள்ளிடம் என்னும் ஆறு பாய்வதனால்தான் அது நீர்வளமும் நிலவளமும் செழித்திருக்கிறது.சில இடங்களில் தாழைப்புதர் வளர்ந்து தாழம்பூவின் மணம் கமகம வென்று கமழ்கிறது. அருகில் உள்ள கழனிகளில் கருங்குவளை மலர்ந்து கண்ணுக்கினிய காட்சியளிக்கிறது. தாமரைக் குளத்திலே செந்தாமரையும் வெண்டாமரையும் பசுமையான இலைகளுக்கிடையே வெண்மையாகவும் செம்மையாகவும் மலர்ந் திருக்கின்றன. அன்னப்பறவைகள் தாமரை மலர்களின் மேலே ஏறி விளையாடுகின்றன. வயல்களில் நெற்பயிர் கரும்புபோலச் செழிப்பாக வளர்ந்திருக்கிறது. இன்னொருபுறம் பாக்கு மரங்கள் அடர்ந்து கமுகந்

  • மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'மூன்றாம் நந்திவர்மன்' (1958) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.