உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

2

41

காஸ்மீரம், காந்தாரம் என்னும் நாடுகளுக்கு மஜ்ஜந்திகர் என்னும் தேரரும், மகிஷ மண்டலத்துக்கு மகாதேவர் என்னும் தேரரும் அனுப்பப்பட்டனர். வனவாசி நாட்டிற்கு ரக்கிதர் என்னும் தேரரும், அபரந்தக தேசத்திற்குத் தம்மரக்கிதர் என்னும் தேரரும் மகாராட்டிர தேசத்திற்கு மகாதம்மரக்கிதர் என்னும் தேரரும், யோன தேசத்திற்கு மகாரக்கிதர் என்னும் தேரரும் அனுப்பப்பட்டனர். இமாலயத்தைச் சேர்ந்த நாட்டிற்கு மஜ்ஜிம என்னும் தேரரும் சுவன்னபூமி நாட்டிற்குச் சோனர், உத்தரர் என்னும் தேரர்களும் அனுப்பப்பட்டனர். பெரிய தேரராகிய மகிந்தரும் அவரின் சீடர்களாகிய இட்டியர், உத்தியர், சம்பலர், பத்தசாலர் என்பவர்களும் இலங்கைத் தீவுக்குப் பௌத்த மதத்தைப் பரவச் செய்ய அனுப்பப்பட்டனர். மகிந்தர் முதலியவர்கள், தாம் அடைந்திருந்த இருத்தியினாலே, ஆகாயவழியாகப் பறந்து இலங்கையை யடைந்தனர் என்று மகாவம்சம் என்னும் நூல் (12-ஆம் அதிகாரம்.) கூறுகிறது.

(இதில் கூறப்படுகிற காந்தாரதேசம் என்பது பஞ்சாப் தேசத்து வடபுறத்தில் உள்ள பெஷாவர், ராவல்பிண்டி என்னும் நாடுகளாகும். காஸ்மீரம் என்பது இப்போதுள்ள காஸ்மீர தேசம். மகிஷமண்டலம் என்பது இப்போதைய மைசூர் நாடு என்று கருதுவர் சிலர். ஆனால், விந்தியமலைக்குத் தெற்கில் இருந்ததும் மகிஷ்மதி என்னும் தலை நகரைக் கொண்டிருந்ததுமான மகிஷ மண்டலம் என்னும் தேசமாகும் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். வனவாசி என்பது இப்போதைய வடகன்னட ஜில்லாவைச் சேர்ந்த பகுதி. இங்கு இப்போதும் பனவாசி என்னும் பட்டினம் இருக்கிறது. அபராந்தக (மேற்குக் கோடி) தேசம் என்பது குஜராத்து, கத்தியவார், கச்சு, சிந்து என்னும் நாடுகளைச் சேர்ந்த பாகம். மகாராட்டிரம் என்பது இப்போது மராட்டி பாஷை பேசுகிற மகாராட்டிர தேசம் ஆகும். யோன தேசம் என்பது யவன நாடு. இஃது இந்தியா தேசத்துக்கப்பால் வடமேற்குப் பக்கத்தில் உள்ள தேசம். இமாலயம் என்பது இமயமலைச்சாரலைச் சேர்ந்த நாடுகள். சுவர்ணபூமி என்பது பர்மா தேசம் என்று கருதுவர் சிலர். ஆனால், கர்ணசுவர்ண எனப்படும் வங்காளதேசம் என்றும், மத்திய இந்தியாவில் உள்ளதும் கங்கையாற்று ஒரு கிளையாக உள்ளதும் ஆன சோணை நதி (இரண்ய வாஹயைச் சூழ்ந்த நாடு என்றும் ஆராய்ச்சி வல்லார் கருதுவர். இலங்கை அல்லது தம்பபன்னி (தாம்ரபரணி) என்பது இப்போதைய சிங்களத் தீவு ஆகும்.)