உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

செய்கின்ற பகுதியும் காணப்படுகின்றது. அது வருமாறு:-

"தரும விஜயம் (அறவெற்றி) என்னும் வெற்றியே மாட்சி மிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதல் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும் அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ் மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த (அற) வெற்றி அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது.' இந்தச் சாசனம் கி.மு. 258இல் எழுதப்பட்டது. அசோக மன்னர், தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தரும விஜயத்தை - அஃதாவது, பௌத்த தருமத்தைப் போதித்து அதனைப் பரவச் செய்வதால் வந்த அற வெற்றியை - கைப்பற்றினார் என்னும் செய்தியை இச்சாசனம் தெரிவிக் கின்றது. இதன் திரண்ட பொருள் என்னவென்றால், அசோக சக்கர வர்த்தி தூதர்களை (பிக்ஷுக்களை) அனுப்பிப் பௌத்த தருமத்தைத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பல நாடுகளிலும் பரவச் செய்தார் என்பதே. சரித்திர ஆராய்ச்சியாளர் அனைவரும் இக் கருத்தையே இச்சாசனப்பகுதி விளக்குவதாக கூறுகின்றனர்.

அசோக மன்னர் காலத்தில்தான் பௌத்தமதம் தமிழ்நாட்டிற்கு வந்தது என்பதற்கு வேறுவிதமான புறச்சான்றும் கிடைக்கின்றது. 'மகா வம்சம்’, ‘தீபவம்சம்' என்னும் பௌத்த நூல்கள் இலங்கையில் பௌத்த மதம் வந்த வரலாற்றினையும், அந்த மதத்தை இலங்கை அரசர் எவ்வாறு போற்றிப் பாதுகாத்து வந்த னர் என்னும் வரலாற்றினையும் விரிவாகக் கூறுகின்றன. இலங் கைத்தீவு தமிழ்நாட்டையடுத்துள்ள தாகையாலும், தமிழ் நாட்டினைக் கடந்தே இலங்கைக்குச் செல்ல வேண்டுமாகையாலும், இலங்கையில் பௌத்த மதம் வந்த அதே காலத்தில்தான் தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் வந்திருக்கவேண்டும் என்று துணியலாம். ஆகவே, தீபவம்சமும் மகாவம்சமும் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம். பாடலீபுரம் என்னும் நகரத்தில் அசோக சக்கரவர்த்தியின் ஆதரவில் மொக்கலபுத்த திஸ்ஸ என்னும் தேரரின் தலைமையில் மூன்றாவது பெளத்த மகாநாடு கூடியதென்றும், ஒன்பது திங்கள் வரையில் அந்த மகாநாட்டில் பௌத்தமத ஆராய்ச்சி நடை பெற்றதென்றும், மகாநாடு முடிந்த பின்னர்ப் பௌத்த மதத்தைப் பரப்பு வதற்காகப் பல பிக்குகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப் பட்டனர் என்றும், இந்த நூல்கள் கூறுகின்றன.