உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு

கி.மு. ஐந்தாம் நுற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம், தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் எப்போது வந்தது? இந்த மதத்தை முதல் முதல் இங்குக் கொண்டு வந்தவர் யாவர்? இவற்றைப் பற்றி இங்கு ஆராய்வோம்.

கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், அஃதாவது கி.பி. மூன்றாவது நூற்றாண்டுக்குப் பிறகுதான், பௌத்த மதம் தமிழ் நாட்டில் வந்திருக்கக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர். இவ்வாறு இவர்கள் கருதுவதற்குக் காரணம் யாதெனில், கடைச்சங்க நூல்களில் பௌத்த மதத்தைப் பற்றிக் கூறப்படாதது தான். ஆனால், இவர்கள் கருத்துத் தவறெனத் தெரிகின்றது. பௌத்த மதத்தைப் பற்றிய குறிப்புகள் கடைச் சங்கத் தொகை நூல்களுட் காணப்படவில்லையாயினும், அச் சங்க காலத்து நூல்களில் காணப் படுகின்றன. அஃதாவது, கடைச்சங்க காலத்து நூல்க ளாகிய மணிமேகலை சிலப்பதிகாரம் மதுரைக்காஞ்சி என்னும் நூல் களில் இந்த மதத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன. அன்றியும், பௌத்தமதப் புலவர்கள் இயற்றிய செய்யுள்கள் கடைச் சங்கத் தொகை நூல்களுட் காணப்படுகின்றன. மணிமேகலை என்னும் பௌத்த காவியத்தை இயற்றிய பௌத்தராகிய கூலவாணிகர் சாத்தனார் அருளிச் செய்த செய்யுள்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந் தொகை என்னும் நூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. இளம்போதியார் என்பவரும் கடைச்சங்க காலத்திலிருந்த பௌத்தப் புலவர். இவரது பெயரே இவர் பௌத்தர் என்பதைத் தெரிவிக்கின்றது. (போதி = அரச மரம்; அரச மரத்தின் கீழே புத்தர் ஞானம் பெற்றபடியால், பௌத்தர் அரசமரத்தைத் தொழுவது வழக்கம்.) இந்த இளம்போதியார் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் கடைச்சங்கத் தொகை நூலில் 72ஆம் பாட்டாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றது. ஆகவே, கடைச்சங்க நூல்களில் பௌத்தப் புலவர்களின் செய்யுள்கள் தொகுக்கப்பட்டிருக் கின்றபடியினாலே, அச்சங்க காலத்துக்குப் பிறகுதான் பௌத்தமதம் தமிழ்நாடு வந்திருக்கக் கூடும் என்பது தவறாகின் றது. கடைச்சங்க காலத்திலேயே, அஃதாவது, கி.பி. முதலாவது, அல்லது இரண்டாவது நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்தது என்பது நன்கு விளங்குகின்றது ஆயினும்,