உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -8

சிந்தாமணி என்னும் ஐம்பெருங்காப்பியங்களை இயற்றித் தமிழ் மொழியை அழகுறச் செய்தவர் பௌத்த ஜைனரேயாவர். மணி மேகலை, குண்டலகேசி என்னும் இரண்டையும் பௌத்தரும்; சிலப்பதிகாரம், வளையாபதி, சிந்தாமணி என்னும் மூன்றையும் ஜைனரும் இயற்றினர். அவர்கள் அப்பெருமாட்டிக்கு அணிவித்த வேறு அணிகலன்களும் பலப்பல உள்ளன.

பௌத்தர் (ஜைனருங்கூட) தமிழ்நாட்டிலே தமிழ்மொழியிலே தமது மதக் கொள்கையைப் பரப்பிய செய்தியை இதுகாறுங் கூறினோம். இதுவன்றியும், பௌத்தர், தமிழ்நாட்டிலே பிராமி எழுத்தைப் பரவச் செய்யக் காரணமாக இருந்தனர் என்பதை விளக்குவோம். பிராமி அல்லது பிராஹ்மி என்று கூறப்படும் எழுத்தைப் புதிதாகக் கண்டு பிடித்தவர் பகவான் புத்தர் என க்ஷேமேந்திரர் என்பவர், தாம் இயற்றிய புத்தஜனனம் என்னும் நூலிலே கூறியுள்ளார்.

வர்தமான: குமாரோத ஸர்வ வித்யா சுபாரக: லிபிப்ர வீனோ பினவாம்

லிபிங் பிராஹ்மீம் வினிர்மமே

என்று அவர் கூறியுள்ளார். அஃதாவது: சித்தார்த்த குமாரன் (புத்தர்) இளமையில் எல்லாவித வித்தைகளையும் கற்று வளரும்போது, தாமாகவே பிராஹ்மி எழுத்தை உண்டாக்கி நிறுவினார் என்பது இச் செய்யுளின் கருத்தாகும்.

பிராஹ்மி எழுத்தை இந்தியா முழுவதிலும் பரவச் செய்தவர்கள் பௌத்தர் ஆவர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் சக்கர வர்த்தியாக விளங்கியவரும், பௌத்த மதத்தை மேற்கொண்டதோடு, அம்மதத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவச் செய்தவரு மாகிய அசோக சக்கரவர்த்தி தமது ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளி லெல்லாம் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் பிராமி எழுத்தையே உபயோகித்து இருக்கிறார். காரோஷ்டி முதலான வேறு எழுத்துகள் அசோகர் காலத்தில் வழங்கிவந்த போதிலும், அவற்றை உபயோகிக்காமல், பிராமி எழுத்தை உபயோகித் ததன் கருத்து அது புத்தர் உண்டாக்கிய எழுத்து என்னும் நம்பிக்கையாக இருக்கலாம். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மட்டும் பிராமி எழுத்து