உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்

1. இளம் போதியார்

இவர் பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம். இவர் தமிழ்மொழியில் வல்லவர். கடைச்சங்க காலத் தில் இருந்தவர் கி.பி. முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் சங்க இலக்கியத்தில் 72ம் பாட்டாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றது. அப்பாடல் இது:

பேணுப பேணார் பெரியோர் என்பது நாணுத்தக் கன்றது காணுங் காலை! உயிர்ஓர் அன்ன செயிர்தீர் நட்பின்

நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி தழிதக் கன்றால் தானே! கொண்கன் யான்யாய் அஞ்சுவல்! எனினும் தானே பிரிதல் சூழான்; மன்னே! இனியே, கானல் ஆயம் அறியினும், ஆனா தலர்வ தன்றுகொல் என்னும்! அதனால் புலர்வது கொல் அவன் நட்(பு)எனா அஞ்சுவல் தோழிஎன் நெஞ்சந் தானே!

2. அறவண அடிகள்

இவரது வரலாறு மணிமேகலை என்னும் நூலினின்றும் அறியக்கிடக்கின்றது. இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர். இவரது இளமையில் இவர் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கையில் உள்ள பாதபங்கயமலை வரையில் யாத்திரை செய்தவர் என்று தெரிகின்றது. பௌத்த தருமத்தை இவர் நன்கு கற்றவர். அதனோடு அதைப் பலருக்கும் போதித்து வந்தவர். இவர் நாவன்மை படைத்தவர் என்று தோன்றுகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தவர். கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டு மாதவி தன் மகள் மணிமேகலையுடன்