உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

109

இவரது பள்ளியை அடைந்து இவரிடம் பௌத்த தருமங் கேட்டு பஞ்சச் சீலத்தை மேற்கொண்டாள். சோழமன்னன் இராணி இராசமாதேவி மணி மேகலையைச் சிறைப்பிடித்து வைத்திருந்தபோது, அவளைச் சிறை வீடு செய்ய இவர் அரண்மனை சென்றார். இவரது வருகையைக் கண்ட இராசமாதேவி மிகுந்த வணக்கத்தோடு இவரை வரவேற்றாள் என்று கூறப்படுவதினின்றும், அரச குடும்பத்தினரா லும் இவர் நன்கு மதிக்கப் பட்டிருந்தவர் என்பது விளங்கும். காவிரிப் பூம்பட்டினத்தில் கடற் பெருக்குண்டான போது, இவர் அதனைவிட்டு மாதவியுடன் சேரநாட்டு வஞ்சி மாநகரம் சென்று, அங்குச் சிலநாள் தங்கியபின் காஞ்சி மாநகரம் சென்று, கடைநாள் வரையில் அங்கேயே தங்கி யிருந்தார். பின்னர், அங்கு வந்த மணிமேகலைக்குப் பௌத்த தருமத்தை ஐயமறப் போதித்தார். நீண்டநாள் வாழ்ந்திருந்த இவர் காஞ்சி மாநகரத்திலே நிர்வாணம் (வீடுபேறு) பெற்றார். இவரது காலம் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும்.

இப்பொழுது காஞ்சீபுரத்தில், 'அறப்பணஞ்சேரி' என்னும் பெயருடைய தெரு ஒன்று இருக்கிறதென்றும், அஃது ‘அறவணஞ்சேரி' என்பதன் மரூஉ. என்றும், இந்த அறவணஞ்சேரி என்னும் தெருவில் அறவண அடிகள் வாழ்ந்திருத்தல் கூடுமென்றும், ஆனதுபற்றியே அவர் பெயரால் அறப்பணஞ்சேரி (சேரி - தெரு) என்று வழங்கப்பட்ட தென்றும் கூறுவர் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். அறப்பணஞ்சேரித் தெரு காஞ்சீபுரத்துக் காமாட்சியம்மன் கோயில் சந்நதித் தெருவின் அருகில் உள்ளது.

அறவண அடிகளைப் பிற்காலத்தில் இருந்த தருமபாலர் என்னும் பெளத்தர் என்று கூறுவர் சிலர். தருமபாலர் என்பது அறவண அடிகள் என்பதன் நேர் மொழிபெயர்ப்பு என்று இவர் கருதுவதால், இவ்வாறு கூறுகின்றனர் போலும். அறவண அடி கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர். தருமபாலரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இதனால் அறவண அடிகள் வேறு; தருமபாலர் வேறு என்பதை அறியலாம்.

அறவண அடிகள் என்பவர் ஒருவர் உண்மையில் இருந்திலர் என்றும், மணிமேகலையில் கூறப்படுமவர் ஒரு கற்பனைப் பெரியார் என்றும் சிலர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதன் காரணம் யாதெனில், அறவண அடிகள் ஆகாய வழியாகச் சென்றார் என்பதும்,