உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

மணிமேகலை, மாதவி முதலியவர்களின் பழம்பிறப்பில் இவர் அவர்களைக் கண்டதாகக் கூறப்படுவதுமே. இவை மானிட ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செய்கைகளாதலின். இவரைக் கற்பனைப் பெரியார் என்பர். இவ்வாறு கருதுவது தவறு என்று தோன்றுகிறது. இறந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சிகளையறிதல், வேறிடங் களுக்கு வானத்தில் பறந்து செல்லுதல் முதலியவை பௌத்தமதக் கொள்கைப்படி பௌத்த தேரர்களுக்கு ஏற்பட்ட இலக்கணங்களாகும். இதனை ‘ரித்தி' என்பர். ‘ரித்தி’ எனினும் ‘சித்தி’ எனினும் ஒக்கும். பௌத்த மதத்தில் மட்டு மன்று; இந்து மதத்திலும் சங்கராச்சாரியார், சம்பந்தர் முதலிய பெரியார்களும் மானிட ஆற்றலுக்கப்பாற்பட்ட தெய்வீகச் செயலைச் செய்தவர் என்று கூறப்படுகின்றனர். அது கொண்டு இவர்களையும் கற்பனைப் பெரியார் என்று கருதத்தகுமோ? இவற்றை அவ்வச்சமயக் கொள்கை என்று ஒதுக்கி விடுவோமா யின், அவர்களும் உண்மைப் பெரியாரே என்பது விளங்கும்.

3. மணிமேகலை

யாம் அறிந்த வரையில், தமிழ்நாட்டில் பெயர் பெற்ற பௌத்தப் பிக்குணி இவள் ஒருத்தியே. இவளது வரலாறு மணி மேகலை நூலினால் அறியப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வத்திற் சிறந்த கோவலன் என்பவனுக்கும், அவனது காமக் கிழத்தி மாதவி என்பவளுக்கும் பிறந்தவள் மணிமேகலை. இக்குழந்தை செல்வமாக வளர்க்கப்பட்டுத் தக்க வயதடைந்த பின்னர், இசைக்கலை நாடகக் கலைகளைக் கற்றுத் தேர்ந்து மங்கைப்பருவம் அடைந்தது. இந்நங்கை யின் கட்டழகினையும், இசைக்கலை நாடகக்கலைகளில் அடைந்துள்ள தேர்ச்சியினையும் கண்டு, சோழ அரசன் மகன் உதயகுமாரன் என்பவன் இவள்மேல் காதல் கொண்டான்.

இவ்வாறிருக்க, மணிமேகலையின் தந்தை கோவலன் மதுரை மாநகரம் சென்று, ஆங்குப் பொய்க்குற்றஞ் சாற்றப் பெற்றுக் கொலை யுண்டிறந்தான். கோவலன் இறந்த செய்தியைக் கேட்டு மாதவி மனம் நொந்து, உலகினை வெறுத்துத் தன் மகள் மணிமேகலையுடன் அறவண அடிகள் என்னும் பௌத்த பிக்ஷு இருந்த பௌத்தப் பள்ளியில் சரணடைந்து, பௌத்த சீலத்தை மேற்கொண்டாள். மணிமேகலையை நாடகக் கணிகை வாழ்க்கை யில் புகுத்த அவள் பாட்டி சித்திராபதி என்பவள் கடுமையாக முயன்றாள். ஆயினும், மணிமேகலை அந்த