உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

113

கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்றும் கருதத் தோன்றுகிறது. ஆனால், ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இதன் உண்மை விளங்கும். மணி மேகலை ஆகாயத்தில் பறந்து சென்றாள் என்பது வெறுங்கற் பனைதான். ஏன் இப்படிக் கற்பித்தார் என்பதை ஆராயவேண்டும். மணிமேகலைக் காவியம் சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல்.

சங்ககாலத்தில் தமிழ்மகளிர் கடலில் பிரயாணம் செய்யக் கூடாது என்னும் மரபு இருந்தது. அந்த மரபை அக்காலத்துத் தமிழரும் தமிழ்ப் புலவர்களும் கடைப்பிடித்து கையாண்டார்கள். அவ்வாறே இலக்கண மும் எழுதி வைத்தார்கள். முந்நீர் வழக்கம் மகடூ உவோடில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால், பௌத்த மதத்துப் பெண்மணிகளுக்கு இந்தத் தடை இல்லை, பௌத்த மதத்தைச் சேர்ந்த மணிமேகலை, கடல் கடந்த நாடுகளுக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தபடியால் அவள் கடலில் கப்பற் பிரயாணம் செய்தாள். கடல் யாத்திரை செய்தது பௌத்தமதத்தவருக்குக் குற்றம் அன்று. ஆனால், இந்த வரலாற்றைக் காவியமாக எழுதிய சாத்தனார், பௌத்தருக்காக மட்டும் காவியம் எழுதவில்லை. பௌத்தரல்லாத தமிழருக்காகவும் மணிமேகலை காவியத்தை எழுதினார். ஆனால், பௌத்தரல் லாத தமிழருக்கு மகளிர் கடற்பிரயாணம் செய்வது உடன் பாடன்று. அஃது அவர்களுடைய மரபுக்கும் பண்பாட்டுக்கும் மாறுபட்டது. ஆகவே சங்கப் புலவரான சாத்தனார் தம்முடைய காவியத்தில் கற்பனையைப் புகுத்த வேண்டியவரானார். மணிமேகலை கடற்பிரயாணஞ் செய்தாள் என்னும் உண்மையைக் கூறினால் அக்காலத்துத் தமிழுலகம் இந்த நூலை ஏற்காது. ஆகவே அவர்களும் ஏற்கத்தக்க விதத்தில் மணிமேகலை ஆகாய வழியாக அயல் நாடுகளுக்குப் பறந்து சென்றாள் என்று கற்பனை செய்து காவியத்தை முடித்தார். அந்தக் காலத்துத் தமிழரின் பழக்கவழக்கப் பண்பாடுகளுக்கு முரண்படாமல் கற்பனை செய்தபடியால் மணி மேகலைக் காவியத்தை அக்காலத்துத் தமிழர் ஏற்றுக் கொண்டார்கள். இந்த உண்மையை ஆராய்ந்தவர் மணிமேகலையைக் கற்பனை உருவம் என்று கருதமாட்டார்கள். மணிமேகலை உண்மையில் வாழ்ந்து இருந்த ஒரு பெண்மணி என்றே கொள்வார்கள். இதன் விரிவான ஆராய்ச்சியை இந் நூலாசிரியர் எழுதியுள்ள மணிமேகலையின் விண்வழிச் செலவு என்னும் கட்டுரையில் காண்க.

மணிமேகலையின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.