உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பௌத்தமதத் தெய்வங்கள்

1. கடற்காவல் தெய்வம் மணிமேகலை

பௌத்தமதத்தின் உயர்ந்த தெய்வம் புத்தர் பெருமான். புத்தர் பரிநிர்வாணம் அடைந்தபிறகு அவருடைய உடம்பைக் கொளுத்தி அதில் எஞ்சிய எலும்பு சாம்பல் ஆகிய இவற்றை எட்டுப் பங்காகப் பங்கிட்டு ஒவ்வொரு பங்கையும் ஒவ்வோர் ஊரில் கொண்டுபோய்ப் புதைத்து அதன்மேல் சேதியங்களைக் கட்டினார்கள். புத்தருடைய தலை மயிர், நகம், பல் முதலிய தாதுக்களையும் சேமித்து அவற்றின்மேல் சேதியங்களைக் கட்டினார்கள். இவற்றிற்குச் சாரீரிக சைத்தியம் என்பது பெயர். சேதியம் எனினும் சைத்தியம் எனினும் ஒன்றே.

புத்தர் பெருமான் உபயோகித்துவந்த கைத்தடி, ஆடை, பாத்திரம், மிதியடி முதலிய பொருள்களையும் சேமித்து வைத்து, அவரின் நினைவுக் குறியாக அவற்றை வணங்கினார்கள். இவற்றிற்குப் பாரிபோக சயித்தம் என்பது பெயர். புத்தகயாவில் புத்தர் போதிஞானம் பெற்ற அரசமரம் இன்றும் வணங்கப்படுகிறது. இந்த அரசமரமும் பாரிபோக சைத்தியமாகும்.

பகவன் புத்தர் காலமான பிறகு சில நூற்றாண்டு வரையில் அவருக்கு உருவம் அமைக்கப்படவில்லை. ஆனால், தரும பீடிகை, பாத பீடிகை ஆகிய உருவங்கள் மட்டும் பௌத்தர்களால் வணங்கப் பட்டன. தருமபீடிகை என்பது சக்கரம் போன்ற உருவமாக அமைக்கப் படுவது. பாதபீடிகை என்பது புத்தரின் பாதங்கள் போன்று உருவம் அமைத்து வணங்கப்படுவது.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு புத்தரின் உருவங்கள் கல், சுதை, செம்பு முதலிய பொருள்களால் அமைக்கப்பட்டு வணங்கப் பட்டன. இவ்வுருவங்களுக்கு உத்தேசிக சைத்தியம் என்பது பெயர்.

பௌத்தர்கள் புத்தரின் உருவங்களை வணங்கி வந்ததோடு, வேறுசில சிறு தெய்வங்களையும் வணங்கி வந்தார்கள். அந்தத் தெய்வங்களைப் பற்றிக் கூறுவோம்.

சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர். இந்த மணி