உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

ஆதித்தனைப் போல மீண்டும் அவர் வானமண்டல வரவுடையா ரெனப்படுவர்” என்று கூறும் தக்கயாகப்பரணி (183-ஆம் தாழிசை) உரைப்பகுதியினால் இது அறியப்படும்.

மற்கலிக்குப் ‘பூரணர்’ என்னும் பெயரும் உண்டு. களங்க மற்ற ஞானமுடையவராகலின், அவருக்கு இப்பெயர் உண்டாயிற் றென்பர். இந்தப் பூரணருடைய இயல்பு கீழ்க்கண்டவாறு ‘நீல கேசி' என்னும் நூலில் கூறப்பட்டிருக்கின்றது.

'உரையா னிறைவ னுணலு மிலனாய்த் திரையா னரையான் றெரிவில் லுருவம் வரையா வகைவா னிடுவில் லனையன் புரையா வறிவிற் புகழ்பூ ரணனே.’

(ஆஜீவக வாதச் சருக்கம் 15-ஆம் செய்யுள்) உரை:"வாக்கியப் பிரவிருத்தியும், புத்தியும், நரை திரை முதலாயின வுமுடையனல்லனாகி ஆகாசதலத்து இந்திர தனுசு போலத் தோன்றும் தோற்றத்தையுடையனாகிக் குற்றப்படாத அறிவை யுடையவன் பூரணனென்னும் எம்முடைய ஆப்தன் என்றவாறு. (ஷை உரை)

وو

ஆசீவக மதத் துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்பது தக்கயாகப் பரணியுரையினால் அறியப்படுகின்றது. இதனை,

'தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்

பாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே’

என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர் 'தாழி - முதுமக்கட் சாடி... தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம் செய்வராதலின், அவரைச் சுட்டி நின்றது' என்று எழுதி யிருப்பதினின்றும் துணியலாம்.

மேலே காட்டிய உரைப்பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகிறது. அஃதாவது, ஆசீவகமதம் ஆருகதமத மாகிய ஜைனமதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், ‘மணிமேகலை', 'நீலகேசி' என்னும் நூல்களில், ஆருகத மதம் (ஜைனம்) வேறு, ஆசீவக மதம் வேறு என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது.