உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

இவர்கள் நிகழ்த்திய ஆடல் பாடல்களில் மனம் செல்லவில்லை. இவர்களின் ஆடல்கள் அவர் கண்ணைக் கவரவில்லை. இனிய பாடல்கள் செவிக்கு இன்பம் ஊட்டவில்லை. ஆகவே, சித்தார்த்த குமாரன் உலக வாழ்க்கையை வெறுத்தவராய்க் கட்டிலிற்படுத்து உறங்கி விட்டார். அரச குமாரன் கண்ணுறங்கியதைக் கண்டு இளமங்கையர் தாம் நிகழ்த்திய ஆடல் பாடல்களை நிறுத்தி, இசைக் கருவிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவ்விடத்திலேயே தாங்களும் உறங்கி விட்டார்கள்.

எல்லோரும் கண்ணுறங்கும் நள்ளிரவிலே சித்தார்த்த குமாரன் விழித்தெழுந்தார். மகளிர் கண்ணுறங்குவதைக் கண்டார். அந்தக் காட்சி அவருக்கு வெறுப்பை உண்டாக்கிற்று. சில மகளிர் வாயைத் திறந்து கொண்டு உறங்கினர். சிலர் வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந் தது. சில மகளிர் வாய் பிதற்றினர். அவர்களின் கூந்தல் அவிழ்ந்தும் ஆடைகள் விலகியும் கிடந்தன. இந்த விகாரக் காட்சிகளைக் கண்ட சித்தார்த்த குமாரன் மனவெறுப்புடன் தனக்குள் இவ்வாறு எண்ணினார்: சற்று முன்பு இவர்கள் தேவலோகப் பெண்களைப் போன்று காணப் பட்டனர். இப்போது வெறுக்கத்தக்கக் காட்சியளிக்கின்றனர். சற்று முன்பு இந்த இடம் தெய்வலோகம் போன்று இருந்தது. இப்போது இடு காடு போலக் காணப்படுகிறது. உலகம் தீப்பிடித்தெரியும் வீடுபோன்று காணப்படுகிறது. இவ்வாறு அவர் தமக்குள் எண்ணிக்கொண்டபோது இப்பொழுதே இல்லற வாழ்க்கையைவிட்டு விலகிப்போக வேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.

உடனே சித்தார்த்த குமாரன் கட்டிலை விட்டெழுந்து மண் டபத்தைக் கடந்து வாயில் அருகிலே வந்து, “யார் அங்கே” என்று பணி யாளர்களை விளித்தார். “அரசே, அடியேன் சன்னன்” என்று கூறித் தேர்ப்பாகன் அவரை வணங்கி நின்றான். “சன்னா! இப்பொழுது நான் அரண்மனையை விட்டுப் புறப்படப் போகிறேன். குதிரையை இங்குக் கொண்டுவா” என்று கட்டளையிட்டார். சன்னன் தலைவணங்கிக் குதிரைக் கொட்டிலுக்குச் சென்றான்.

சித்தார்த்த குமாரன், தமது குழந்தையைப் பார்க்க எண்ணி, யசோதரை அரசியார் உறங்குகிற அறையை நோக்கிச் சென்றார். சென்று, ஓசை படாமல் மெல்லக் கதவைத் திறந்தார். மங்கலான ஒளியைக் கொடுத்துக் கொண்டு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விளக்குகளுக்கு இடப் பட்டிருந்த எண்ணெயிலிருந்து இனிய நறுமணம் அவ்வறையில்