உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் / 29 நிலைமையைக் கண்ட புத்த பகவான், “அரசரே! தூக்கமில்லாமல் கண்விழித்திருக்கிறீர்கள்போல் தோன்றுகிறது” என்று கூறினார்.

“எனக்கு எப்போதும் இப்படித்தான் சாப்பிட்ட பிறகு சோம்பலும் தூக்கமும் மயக்கமுமாக இருக்கிறது. எதிலும் மனம் செல்லுவதில்லை” என்று விடையளித்தார் அரசர்.

பகவருக்கு உண்மை விளங்கிவிட்டது. அரசருக்குத் தேக சுகம் கெட்டிருப்பதன் காரணத்தை அறிந்தார். உடல் நலம் பெறுவதற்குரிய வழியை அருள் செய்ய எண்ணங்கொண்டார். ஆகவே, பகவர் இவ்வாறு அருளிச் செய்தார்: “அரசே! அளவு மீறி உணவு கொள்கிறவர்களுக்கு எப்போதும் இதுபோன்ற துன்பங்களும் இன்னல்களும் உண்டா கின்றன. சோம்பலுக்கு இடங்கொடுத்து மிதமிஞ்சி உணவுகொள்கிற பெருந்திண்டிக்காரர்கள், கூழ்வார்த்து வளர்க்கப்படுகிற பன்றிகளைப் போல, மயக்கங்கொண்டு படுத்துப் புரண்டு தூங்கியே காலங் கழிப்பார்கள். இத்தகைய பேதை மக்கள் மறுமையிலும் வீடுபேறடைய மாட்டார்கள்.

அரசர், முயற்சியோடு உறக்கத்தைத் தடுத்துக்கொண்டு மனத்தை ஒருவழிப்படுத்திப் பகவர் அருளிய மொழிகளைச் செவிசாய்த்துக் கேட்டார். பகவர் மேலும் அருளிச் செய்தார்: “சாப்பிடும் போது விழிப்புடன் இருந்து மிதமாக உணவு கொள்ளவேண்டும். உணவை அளவோடு சாப்பிடுகிறவர்களுக்கு எப்போதும் உடல் நலம் நன்றாக இருக்கும். இதை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். சாப்பிடும்போது விழிப்பாக இருந்து, மிதமாக உணவு கொள்கிறவர்கள், உடம்பில் நோயில்லாமல் இருப்பார்கள். அன்றியும், விரைவில் மூப்படைய மாட்டார்கள்; மேலும் நெடுநாள் உயிர் வாழ்ந்திருப்பார்கள்.

பிறகு பகவன் புத்தர், அரசர் அருகில் இருந்து தம் அறவுரை களைச் செவிசாய்த்து ஊக்கத்தோடு கேட்டுக் கொண்டிருந்த சுதர்சன குமாரனை அழைத்து, தாம் கூறியதை மனத்தில் வைத்துக் கொண்டு அரசர் உணவு கொள்ளும்போதெல்லாம் அருகில் அமர்ந்து அரசர் காதில் கேட்கும்படி பாராயணம் செய்துவரக் கட்டளையிட்டார். சுதர்சன குமாரனும் அவ்வாறு செய்வதாக உறுதி கூறினான்.

அன்று முதல், பிரசேனஜித்து அரசர் உணவு கொள்ளும் நேரங்களில், சுதர்சன குமாரன், அரசன் அருகில் அமர்ந்து பகவன் புத்தர் அருளிய வாக்கியத்தைப் பாராயணம் செய்து வந்தான்.