உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் 55

அந்த ஏவலாளன் சென்று அறிந்துவந்து, "இவன் ஒரு பரம ஏழை. பெயர் கும்பகோசன். வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். வேலைக் காரர்களை அடுத்து ஏதேனும் வேலை கொடுக்கும்படி கேட்டானாம். அவர்கள் இவன்மேல் இரக்கம்கொண்டு, நாள்தோறும் விடியற் காலையில் தங்களைக் கூவி எழுப்ப வேண்டும் என்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்காக இவனுக்கு இருக்க ஒரு சிறு வீடும் கொடுத்திருக்கிறார்கள். சாப்பாட்டிற்குப் படி அரிசியும் தருகிறார்கள்" என்று கூறினான்.

சண்பகம் அரசரிடம் 'இவன் வேலைக்காரர்களின் வேலைக் காரன்” என்று கூறினாள். அரசர் ஒன்றும் சொல்லாமல் வாளா இருந்தார். அடுத்த நாள் விடியற்காலையிலும் அதே குரல் வேலைக்காரர் குடி யிருக்கும் தெருவிலிருந்து கேட்டது. “எழுந்திருங்கள். விடிந்து விட்டது. தொழிலுக்குப் புறப்படுங்கள்” இந்தக் குரல் பல தடவை கேட்டது. அரசர் செவி மடுத்துக் கேட்டார். கடைசியாக நேற்றுக் கூறியது போலவே, அதிலும் திட்டவட்டமாகச் சண்பகத்தினிடம் கூறினார். “இது ஒரு செல்வச் சீமானுடைய குரல்” என்று. சண்பகம் வியப்படைந் தாள். ‘ஒருவேளை, நேற்று விசாரித்து வந்த ஆள் பொய்ச் செய்தியைக் கூறி இருப்பானோ?' என்று திகைத்தாள். அந்த ஆள் அப்படிப் பட்டவன் அல்லன். அவள் மனம் குழம்பியது. இன்னொரு பணியாளை அழைத்து, வேலைக்காரர்களை எழுப்பியவன் யார் என்றும் அவன் வரலாறு என்ன என்றும் விசாரித்து வரும்படி அவனை அனுப்பினாள். இந்த ஆள் போய்த் தகுந்தவர்களைக் கண்டு விசாரித்து வந்து, வேலைக்காரன் நேற்றுச் சொன்ன செய்தியையே தெரிவித்தான். சண்பகம் இதையும் அரசருக்குச் சொன்னாள். அரசர் ஒன்றும் கூறாது வாளா இருந்தார்.

6

மூன்றாம் நாள் வைகறைப் பொழுதில் அதே குரல், வேலைக் காரர் விடுதியிலிருந்து வந்தது. அரசர் ஊன்றிக்கேட்டார். கடைசியில் சண்பகத்திடம் முன்னினும் திட்டவட்டமாக "இது ஒரு செல்வச் சீமானுடைய குரல்" என்று உறுதியுடன் கூறினார். சண்பகத்திற்கு ஐயமும் வியப்பும் குழப்பமும் உண்டாயின. இன்னோர் ஆளை அனுப்பி அந்த ஆளைப்பற்றிய முழு விவரங்களை அறிந்து வரும்படி அனுப்பினாள். அந்த ஆள் சென்று எல்லாவற்றையும் விசாரித்து வந்து முன் கூறியவர்கள் சொன்ன செய்தியையே சொன்னான்.