உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் /73

உண்மைக் கொலையாளியைக் கண்டு பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட சேவகர்கள். குடிகாரர்கள் அடுத்த நாள் நீதிமன்றத்திலே நிறுத்தப் பட்டனர். விசாரணையில், சுந்தரியைக் குத்திக்கொன்றவன் அந்தக் குடிகாரன் என்றும், மற்றக் குடிகாரன் அவனுக்கு உதவியாக இருந்தவன் என்றும் தெரிந்தது.

“சுந்தரியை ஏன் கொலை செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு யாரும் எதிர்பாராத விடை வந்தது. பௌத்த மதத்தாருக்கு மாறாக இருக்கிற வேறு மதத்துச் சந்நியாசிகள் சிலர், தங்களுக்குச் காசு கொடுத்து, சுந்தரியைக் கொன்று பௌத்த சந்நியாசிகள் தங்கியிருக்கும் ஜேதவனத்துக் குப்பைமேட்டில் போட்டு விடும்படி சொன்னார்கள் என்றும் பெருந்தொகை கொடுத்தபடியால் அதற்குத் தாங்கள் உடன்பட்டு அவளைக் கொன்றுவிட்டதாகவும் சொன்னார்கள். இந்தச் செய்தி பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்டது. பணம் கொடுத்துக் கொலை செய்யச் சொன்ன சந்நியாசிகள் இன்னின்னார் என்பதையும் அவர்கள் கூறினார்கள். அந்தச் சந்நியாசிகள் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் முதலில் தங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று கூறினார்கள். ஆனால், தப்ப முடிய வில்லை. இவர்கள்தாம் தங்களை இரகசியமாக அழைத்துச் சுந்தரியைக் கொலை செய்யும்படித் தூண்டினாரகள் என்று கொலை செய்தவர்கள் சான்றுகளோடு கூறினார்கள். கடைசியில் சந்நியாசிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். “உங்கள் மதத்தைச் சேர்ந்த சந்நியாசினியாகிய சுந்தரியை நீங்களே கொலை செய்யச் செய்ததின் காரணம் என்ன?” என்ற கேள்விக்கு விசித்திரமான விடை கிடைத்தது. பௌத்த மதத்துக்கு நாட்டில் பெரிய செல்வாக்கும் மதிப்பும் இருக்கிறபடியினாலே, தங்கள் மதத்தை மக்கள் முன்போல் மதிப்பதில்லை. ஆகையினாலே, பௌத்தமதத்துத் தலைவராகிய புத்தர் மேல் கூடாவொழுக்கப் பழி சுமத்தி அவர் செல்வாக்கைக் குறைக்கவேண்டுமென்று அவர்கள் கருதினார்களாம். அதற்குச் சுந்தரியின் உதவியை நாடினார்களாம். அவளும் அதற்கு உடன்பட்டு நாட்டிலே பொய் வதந்தியை உண்டாக்கினாள். தனக்கும் புத்தருக்கும் கூடாவொழுக்கம் உண்டு என்பதாக மக்களைக் கருதும்படி செய்தாள். மக்களில் பெரும்பான்மையோர் இந்த வதந்தியை நம்பினார்கள். இந்தச் சமயத்தில் சுந்தரியைப் பௌத்தர்கள் கொலை செய்துவிட்டார்கள் என்று மக்கள் நம்பினால், பௌத்தர்களுக்கு அடியோடு செல்வாக்கு