உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் / 89

கூறினார். அவ்வாறே மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றார்கள். சீவகன் மருத்துவத் தொழிலில் பேர்போன வைத்தியன். அவன், பகவர் காலில் பட்ட காயத்திற்குத் தகுந்த மருந்து இட்டுக் கட்டுக்கட்டினான். அடுத்த நாளே பகவருடைய காயம் ஆறிவிட்டது.

மாலை நேரமானவுடன் புத்தர் வழக்கம்போல நடந்து உலாவி வரப் புறப்பட்டார். சீடர்கள் தடுத்தார்கள். "தேவதத்தன் மீண்டும் சதிசெய்வான். வெளியே போகவேண்டாம்" என்று கூறித் தடுத்தார்கள். அப்போது பகவர் கூறினார்: “பிக்ஷுக்களே! ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும் முடியாது. ததாகதர் உயிரோடிருக்க வேண்டிய நாள் வரையில் உயிருடன் இருப்பார். ததாகதர் உயிருக்குத் தீங்கு நேரிடும் என்று நீங்கள் அஞ்சவேண்டா” என்று கூறினார்.

பிறகு கைத்தடியை எடுத்துக்கொண்டு வழக்கம் போல உலாவச் சென்றார். சீடர்களும் பின்தொடர்ந்து சென்றார்கள்.