உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

127

குட்டிலக் கலைஞரை எல்லோரும் வரவேற்றார்கள். இந்திரனும் அவரை வரவேற்று "இசைவாணரே! இங்குள்ள கலைவாணர்கள் உம்முடைய இன்னிசையைக் கேட்க விரும்புகிறார்கள். அன்பு கூர்ந்து யாழ் வாசியுங்கள்” என்று கூறினான். இசைவாணர் தம்முடைய யாழை வாசித்து இசை யமுதத்தை வழங்கினார். அவர் வாசித்த பண் தேவலோகத்து இசையைவிட மிக இனிமையாக இருந்தது. தேவர்கள் அந்த இசையமுதத்தைப் பருகி மனமுருகி மகிழ்ந்தார்கள். எல்லோரும் அவருடைய இசையைப் புகழ்ந்து மெச்சினார்கள். குட்டிலப் புலவர் ஏழு நாட்கள் இந்திரசபையில் யாழ் வாசித்து இசை யமுதத்தை வழங்கினார்.

சக்கரன் (இந்திரன்) புலவருக்கு விலையுயர்ந்த பொருள் களைப் பரிசாக வழங்கினார். பிறகு மாதலி அவரைத் தேரில் ஏற்றிக் கொண்டு விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்துக்கு வந்து குட்டிலப் புலவரை அவருடைய வீட்டில் விட்டுச் சென்றான். குட்டிலப் புலவரின் புகழ் மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் பரவியிருந்தது.