உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

அணங் கரவு உரித்ததோல் அனைய மேனியன் வணங்கு நோன்சிலை யென வளைந்த யாக்கையன் பிணங்கு நூல் மார்பினன் பெரிதோர் புத்தகம் உணர்ந்து மூப் பெழுதினது ஒப்பத் தோன்றினான்

வெண்ணரை உடம்பினான் விதிர்ந்த புண்ணியன் நுண்ணவிர் அறுவையன் நொசித்த நோக்கினான் கண்ணவிர் குடையினன் கைத்தண்டு ஊன்றினான்

155

இப்படி மூத்து முதிர்ந்த கூனக் கிழப் பிராமணன் அந்தத் தெருவில் நடந்தான் தண்டு ஊன்றித் தள்ளாடிக் குனிந்து தரையை நோக்கித் தெருவிலே நடக்கும் கிழவகைக் கண்டு ஆண்களும் பெண்களும் ‘ஐயோ பாவம்!' என்று மனமிரங்கி னார்கள்.

நற்றொடி மகளிரும் நகர மைந்தரும் எற்றிவன் மூப்பென இரங்கி நோக்கவே பொற்றொடி வளநகர் வாயில் புக்கனன்

பற்றிய தண்டொடு பைய மெல்லவே

கன்னிமாடத் தெருவில் நுழைந்தபோது, இந்தத் தெருவில் ஆண்மக்கள் போகக்கூடாது என்று காவலர் தடுத்தார்கள். “நீ யார், எங்கே போகிறாய்" என்று அதட்டிக் கேட்டார்கள். கிழப் பிராமணன் அவர்கள் முகத்தைப் பார்த்து "முன்பு பால் சோறு உண்டேன். இப்போது என்ன சோறு கொடுத்தாலும் உண்பேன்" என்று கூறினான்.

'இவன் செவிட்டுக் கிழவன் போலும், நாம் ஒன்று கேட்டால் இவன் ஒன்று சொல்லுகிறான். பாவம்! கிழப் பிராமணன். பசித்திருக் கிறான் போலிருக்கிறது' என்று கருதி அவனைப் பிச்சைக்காரன் என்று எண்ணி உள்ளே நுழைய விட்டார்கள்.

கிழவன் மெல்லமெல்லத் தள்ளாடித் தடியை ஊன்றி நடந்து கன்னிமாடத்தின் வாயிலண்டை வந்தான்.

காவல் இருந்த பெண்கள் “உள்ளே வரக்கூடாது போ போய்விடு என்று விரட்டினார்கள். கிழவன் அங்கேயே நின்றான். மாளிகைக் குள்ளிலிருந்து சில ஊழியப் பெண்கள் வந்து பார்த்து. "இந்தக் கிழப் பிராமணன் பிச்சைக்கு வந்திருக்கிறதாகத் தோன்றுகிறான்” என்று எண்ணி மாளிகைக்குள்ளே சென்று சுரமஞ்சரியிடங் கூறினார்கள்.