உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இதைக் கேட்டு, இவளுடைய தாய் மனம் வருந்தினாள். அவள் தன்னுடைய கணவனான குபேரதத்தனிடம் சென்று இந்தச் செய்தியை அவனிடங் கூறினாள். குபேரதத்தன் சிந்தித்துப் பார்த்தான். தன்னுடைய மகளின் கருத்துப்படியே செய்வேன் என்று முடிவு செய்தான். அவள் இருக்கும் கன்னிமாடத்தின் வழியே ஆண்மகன் எவனும் வராதபடி செய்வேன் என்று உறுதிகொண்டான்.

பிறகு தன் மாளிகையில் இருந்த விலையுயர்ந்த மாணிக்க மாலையை எடுத்துக்கொண்டு அரசனுடைய அரண்மனைக்குச் சென்று அரசனைக் கண்டான். தன்னுடைய மகளின் சபதத்தைத் தெரிவித்து அவள் இருக்கும் கன்னிமாடத்துத் தெரு வழியே ஆடவர் ஒருவரும் வராதபடி ஆணையிட வேண்டுமென்று அரசனைக் கேட்டுக் கொண்டு தான் கொண்டு வந்த மாணிக்க மாலையைக் காணிக்கை யாகக் கொடுத்தான். அரசன் குபேரதத்தனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி சுரமஞ்சரி இருக்கும் கன்னி மாடத் தெருவழியே ஆண்மகன் எவனும் போகக்கூடாதென்று ஆணை கொடுத்தான். அன்று முதல் ஆடவர் எவரும் அந்தத் தெரு வழியே போவதில்லை.

சுரமஞ்சரி ஆடவரைப் பார்ப்பதில்லை என்னும் சூளுறைவுடன் தன்னந்தனியே தன்னுடைய கன்னிமாடத்தில் தோழிமாருடனும் பணிப் பெண்களுடன் இருந்தாள். வீணை வாசிப்பதும் இசை பாடுவதும் அவர் களுடைய பொழுதுபோக்காக இருந்தன. இவ்வாறு பல திங்கள் கழிந்தன.

சுரமஞ்சரியின் சபதத்தைச் சீவகன் அறிந்தான். அவளுடைய சூளுறையை மாற்றித் தன்னுடைய இசைப்பாட்டினால் அவளை வசப் படுத்தி அவளை மணம் புரிய எண்ணினான். இது பற்றித் தன்னுடைய நண்பனுடன் யோசித்தான். கன்னிமாடத் தெருவில் ஆடவர் நுழைய முடியாதபோது கன்னிமாடத்துக்குள் எப்படி நுழைய முடியும்? ஆனால், பிச்சைக்காரக் கிழப் பிராமணன் செல்லலாம் அல்லவா, பிச்சைக்காரன், அதிலும் கிழப் பிராமணன். அவனைத் தடுப்பவர் யார்? சீவகக் குமரன் கன்னிமாடம் போகத் துணிந்தான்.

ஒரு நாள் கன்னிமாடத் தெருவில் வயது முதிர்ந்த கிழப் பிராமணன் கூனிக் குனித்து கையில் தண்டு ஊன்றி பையப்பையத் தள்ளாடி நடந்து வந்தான். வெயிலை மறைக்கத் தாழங்குடை பிடித்திருந்தான்.