உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இப்போது காந்தருவதத்தை பாடிய இசையும் வாசித்த வீணையும் இனிமையாக இல்லை. இசையும் நாதமும் ஒத்திருக்க வில்லை. பாட்டின் ராகம் ஒன்றாகவும் வீணையின் நாதம் வேறாகவும் பொருந்தாமல் இருக்கின்றன. காந்தருவதத்தையா, இசைக்கலைச் செல்வி காந்தருவதத்தையா இப்படிப் பாடுகிறாள்! இது என்ன விந்தை!

கடந்த ஆறு நாட்களாக இசைப் போட்டியில் இசை வாணவர்களைத் திணற வைத்து வெற்றிகண்ட காந்தருவதத்தை இப்போது பாடுகிற பாடல்கள் இசை முறை தவறிப் பண் பாடல் ஒன்றாகவும் வீணையின் நாதம் ஒன்றாகவும் தோன்றுகிறது. நூற்றுக்கணக்கான பாடகர்களை வெற்றிகண்ட காந்தருவ தத்தை ள இப்போது சீவக நம்பியிடம் தோல்வியடைந்தாள்.

பண்ணொன்று பாடல் அதுஒன்று பல்வளைக்கை மண்ணொன்று மெல்விரலும் வாள் நரம்பின் மேல்நடவா விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி

எண்ணின்றி மாதர் இசைதோற் றிருந்தனளே.

காந்தருவதத்தையின் தோல்வி வெளிப்படையாகத் தெரிகிறது. சீவக நம்பி இசை வென்றதற்காக அவையில் மகிழ்ச்சியாரவார ஒலி எழுகின்றது. சீவக நம்பி எழுந்து நின்று சபையோரை வணங்கு கின்றான். காந்தருவதத்தை மெல்ல எழுந்து வெள்ளிப் பேழையி லிருந்து பொன்னரி மாலையை எடுக்கிறாள். பொன்னரி மாலை தகதக வென்று மின்னுகிறது. மெல்ல வந்து சீவகன் கழுத்தில் மாலையைச் சூட்டி வணங்குகிறாள். எல்லோரும் கைகொட்டி ஆரவாரஞ் செய்து மகிழ்கிறார்கள். சீவக நம்பியும் காந்தருவதத்தையும் மணமகனும் மணமகளுமாகக் காட்சி யளிக்கிறார்கள்.

நீலநிறத் திரை மெல்லத் தவழ்ந்து வந்து மேடையை

மறைக்கிறது.

சீவக நம்பிக்கும் காந்தருவதத்தைக்கும் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!