உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

இதைக்கேட்ட சாமன் கூறினான்: "ஓ! அரசர் பெருமானே! அப்படியே செய்க. அவர்களைக் காத்து அருள்க!" என்று கூறி சிரமத்துக்குப் போகும் வழியைக் கை நீட்டிக் காட்டினான். “என் தலை இருக்கும் திசைவழியே போனால் காலடிப் பாதை தெரியும். அப்பாதை வழியே நூறு வில் தூரம் மரங்களிடையே போனால் என் பெற்றோர் உள்ள ஆசிரமம் இருக்கிறது. அங்கே சென்று அவர்களுக்கு உதவி செய்தருள்க” என்று கூறி வலியைப் பொறுத்துக்கொண்டு மிகுந்த கஷ்டத்தோடு தன்னுடைய இரண்டு கைகளையும் சேர்த்துக் கூப்பி அரசனை வணங்கிக் கொண்டே மேலும் சொன்னான்: “வாரணாசி மன்னரே! உம்மை வணங்குகிறேன். ஆதரவு அற்ற என்னுடைய குருட்டுப் பெற்றோரைக் காத்தருளும். அவர்களுக்கு உதவி செய்யும்படி உம்மை வேண்டுகிறேன். அரசே! உம்மைக் கைகூப்பி வணங்குகிறேன்; தலை தாழ்த்தி இறைஞ்சுகிறேன். என் தாய் தந்தையருக்கு என்னுடைய வணக்கத்தைக் கூறும். அவர்களைப் போற்றிக் காத்தருளும்.

அரசன் அவ்வாறே செய்வதாக உறுதி கூறினான். சாமன் அதற்கு மேல் ஒன்றும் பேசமுடியாமல் கண்களை மூடிச் செய லற்றுக் கிடந்தான். அவனுடைய வாயும் கண்களும் மூடிக் கொண்டன. கைகளும் கால்களும் விறைத்துக்கொண்டன. உடம்பு முழுவதும் இரத்தம் ஒழுகிக் கிடந்தது.

இதுவரையிலும் பேசிக்கொண்டிருந்த இவனுடைய மூச்சு நின்று விட்டது. உடம்பு விறைத்துக்கொண்டது. சாமன் இறந்துவிட்டான் என்று சொல்லி அரசன் வருத்தம் அடைந்து, தன் கைகளினால் தலையில் அறைந்துகொண்டு வாய்விட்டு அழுதான்.

கந்தமாதன மலைமேலே ஒரு தெய்வமகள் வாழ்ந்து வந்தாள். அவள் பெயர் பகசோதரி என்பது. அவள் ஏழு பிறவிகளுக்கு முன்பு சாமனின் தாயாக இருந்தவள். சாமன் அம்பு பட்டு மணலில் விழுந்து கிடப்பதை அவள் அறிந்து, தனக்குள் இவ்வாறு எண்ணினாள்: 'இப்போது நான் சாமனிடம் போகவிட்டால், அவன் இறந்து போவான். அவனைக் கொன்ற வருத்தத்தினால் காசி மன்னனும் மனவேதனை அடைவான். சாமனுடைய பெற்றோர்கள் நீர் வேட்கையினாலும் அவனைக் காணாததாலும் உயிர்விடுவார்கள். நான் அங்கே போவே னானால், அரசன் நீர்க் குடத்தைக் கொண்டு போய் பெற்றோர்களுக்குக்