உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மகா ஜனக ஜாதகம்

ஜேதவன ஆராமத்தில் பகவன் புத்தர் இருந்தபோது இந்தக் கதையைக் கூறினார். ஒருநாள், பிக்குகள் புத்தர் பெருமானின் பெருந்துறவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது புத்தர் அங்கு வந்து என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு இவ்வாறு கூறினார்: “ததாகதர் பெருந்துறவு கொண்டது இதுதான் முதல் தடவையன்று; இதற்கு முன்பும் துறவு பூண்டிருக்கிறார்” என்று சொல்லி, இந்தக் கதையை அவர்களுக்குக் கூறினார்:

விதேக நாட்டின் மிதிலை மாநகரத்திலே மகா ஜனகன் என்னும் பெயருள்ள அரசன் முன்னொரு காலத்தில் அரசாண் டான். அவ்வரச னுக்கு அரிட்ட ஜனகன் என்றும், பொல ஜனகன் என்றும் பெயருள்ள இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். இவர்களில் மூத்த மகனை இளவரசனாகவும், இளைய மகனைச் சேனைத் தலைவனாகவும் அமர்த்தினான். சிலகாலம் சென்றபிறகு மகா ஜனகன் இறந்துவிட அரிட்ட ஜனகன் அரச பதவியையும், பொல ஜனகன் இளவரசு பதவியையும் அடைந்தனர். இவ்வாறு சிலகாலம் சென்றபிறகு, அரண் மனைச்சேவகன் ஒருவன் அரசனிடம் வந்து, இளவரசர் அரிட்ட ஜனகனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்ற நினைத்திருப்பதாகக் கூறினான். இந்தச் செய்தியை பலமுறை கூறக்கேட்ட அரசன் கடைசியில் தன் தம்பி மேல் ஐயம் கொண்டான். ஆகவே இளவரச னுக்கு விலங்கிட்டுச் சிறையில் அடைத்துக் காவல் வைத்தான்.

சிறைப்பட்ட பொல ஜனகன் தனக்குள் இவ்வாறு கூறிக் கொண்டான்: 'நான், அரசனாகிய என் தமயனிடம் பகைமை கொண் டிருந்தால் விலங்குகள் முறியாதிருக்கட்டும்; சிறைக்கதவு திறவாதிருக் காட்டும். உண்மையிலேயே என் அண்ணனிடம் அன்புள்ளவனாக இருப்பேனானால் விலங்குகள் முறியட்டும்; சிறைக்கதவு திறக்கட்டும்.' இவ்வாறு பொல ஜனகன் எண்ணிய போது அவனுடைய விலங்குகள் தாமாகவே உடைந்துவிட்டன. சிறைக்கதவுகள் திறந்துகொண்டன. இளவரசன் வெளியே வந்து நகரத்தை விட்டுச்சென்று கடைசியில் எல்லைப்புறத்திலே ஒரு ஊரைச் சேர்ந்தான். அவ்வூரார், இவன்