உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

பனங்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

குருத்தைப் பிடுங்குவதுபோல கண்ணைப் பிடுங்கிக் கொடுப்பேன். இவ்வாறு சிவி அரசர் தமக்குள் எண்ணித் தான தருமம் செய்வதில் அவாவுள்ளவரானார். பிறகு அவர் சென்று பதினாறு குடம் பனி நீரினால் நீராடி சிறந்த ஆடை அணிகளைச் சிறப்புற அணிந்து, அறுசுவை உணவு அருந்திய பின்னர் அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் மேல் அமர்ந்து அறச்சாலைக்குப் போனார்.

அப்போது தேவர்களின் அரசனாகிய சக்கன், சிவி அரசன் அன்று காலை தமக்குள் உறுதி செய்துகொண்டதை அறிந்து, தனக்குள் இவ்வாறு எண்ணினான்: 'சிவி அரசர் யாரேனும் கண்ணைத் தானங் கேட்டால், தனது கண்களையும் பிடுங்கித் தானம் கொடுப்பதாக உறுதி செய்து கொண்டார். உண்மையிலே இவர் தனது கண்ணைத் தானங் கொடுக்கிறாரா என்பதை நானே போய் அறிந்து வருகிறேன். இவ்வாறு எண்ணிய சக்கன் விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு வந்தார். வந்து, குருட்டுக் கிழப் பிராமணன்போல உருவுகொண்டு தெருவிலே ஒரு மேடான இடத்திலே நின்றுகொண்டிருந்தார். அப்போது சிவி அரசன் யானைமேல் அமர்ந்து அவ்வழியாக அறச்சாலைக்கு வருவதைக்கண்டு கிழப் பிராமணன் தனது கையை நீட்டி, “அரசர் பெருமான் பல்லாண்டு வாழ்க! முடிமன்னன் நீடூழி வாழ்க!” என்று உரத்துக் கூறினான். அரசன் யானையை அவ்விடம் செலுத்தி அருகில் சென்று, “பிராமணா! என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

சக்கனாகிய பிராமணன் கூறினான்: “கொடை வள்ளலே! இந்த உலகத்திலே தங்களுடைய கொடைப்புகழ் பரவாத இடமே இல்லை. நானோ குருடன். உமக்கோ இரண்டு கண்கள் உள்ளன. உம்முடைய கண்களில் ஒன்றைத் தானம் பெறுவதற்காக நான் தொலைதூரத்திலிருந்து வந்தேன். வள்ளலே! அருள்கூர்ந்து உமது இரண்டு கண்களில் ஒரு கண்ணை எனக்குக் தானம் வழங்க வேண்டும். வழங்கியருளினால், எனக்கு ஒரு கண்ணும் உமக்கு ஒரு கண்ணும் இருக்கும்.

இதைக்கேட்ட அரசன் தமக்குள் எண்ணினான்: 'என்ன! இதைத் தானே இன்று காலையில் நினைத்தேன். இது ஓர் நல்ல வாய்ப்பு. இன்று நான் எண்ணிய எண்ணம் நிறைவேறுகிறது. மனிதர் யாரும் இதுவரையில் வழங்காத கொடையை இன்று நான் வழங்கப் போகிறேன்.” இவ்வாறு தமக்குள் எண்ணி மகிழ்ந்த அரசன், பிராமணனைப் பார்த்துச் சொன்னார்: “ஓ தவசியே! கண்ணைத் தானங் கேட்கும்படி தொலை