உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

39

அவர்கள் விட்டுச் சென்றதைத் தொடர்ந்து, முயன்று நிறை வேற்றி மறைந்துபோன அக்கருவியை மீண்டும் இசையரங்கிற்குக் கொண்டுவர வேண்டுவது தமிழ் இசைத் துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவர் கடமையாகும். இது மிகவும் அரிதான வேலை. ஆனால், வெற்றிபெறக் கூடியதே.

பண் ஆராய்ச்சி

தமிழ் இசைச் சங்கம், தேவாரப்பண் ஆராய்ச்சி செய்து வருவது போற்றத்தக்கது. இவ்வாராய்ச்சியினால் சில உண்மைகள் அறியப் படுகின்றன. உதாரணமாக யாழ்முரிப்பண்ணை எடுத்துக் கொள்வோம். சம்பந்த சுவாமிகள் பாடிய “மாதர்மடப் பிடியும்” எனத் தொடங்கும் இப்பாட்டு இக்காலத்தில் அடானா இராகத்தில் பாடப்படுகிறது. தேவார ஆராய்ச்சியின் காரணமாக, 50 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தப் பாட்டு அடானா இராகத்தில் குருசாமி தேசிகர் என்பவரால் பாடப்பட்டு அதனையே பின்பற்றி மற்றவர்களும் பாடி வருகிறார்கள் என்பதும், 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்பாட்டு மேகராகக் குறிஞ்சி என்னும் பண்ணினால் பாடப்பட்டதென்பதும் அறியப்பட்டன. இது போன்ற பல செய்திகளை இசை ஆராய்ச்சியினால் அறியக்கூடும்.

பழைய ஆடல்கள்

பண்டைக் காலத்தில் ஆடப்பட்ட கொடுகொட்டி, பாண்டரங்கம் முதலிய ஆடல்களும் இப்போது மறைந்துவிட்டன. இவ்வாடல் களையும் மீண்டும் புதுப்பித்து அரங்கத்திற்குக் கொண்டுவர வேண்டுவது நட்டுவர்களாகிய ஆடலாசிரியர்களுடைய கடமை யாகும்.

இலக்கியக் கலை

பழையகாலத்து அழகுக் கலைகளை ஆராய்வதை நோக்கமாக எழுதப்பட்ட இந்நூலிலே, இக்காலத்து இலக்கியக் கலையைப் பற்றிக் கூறவேண்டுவது இல்லை. பழைய இலக்கியங்களைப் போற்றுவது எப்படி என்பதைக் கூற வேண்டும். இசைக்கலையைப் போலவே இலக்கியக் கலையைப்பற்றியும் மக்கள் அதிகமாகத் தெரிந்திருக் கிறார்கள். ஆனால், பழைய இலக்கியக் கலைகளை இப்போது மக்கள் அதிகமாகப் போற்றுவது இல்லை. பழைய இலக்கியங்களின் பெயரைக் கூட மறந்துவிடுகிறார்கள்.