உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

66

45

எனவே, பொருள்களின் இயற்கை உருவத்தை அப்படியே காட்டுவது அயல்நாட்டுச் சிற்பக் கலையின் நோக்கம்; உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் உருவங்கள் மூலமாக வெளிப் படுத்துவது நமது நாட்டுச் சிற்பக் கலையின் நோக்கம் என்னும் உண்மையை மறவாமல் மனத்திற்கொள்ள வேண்டும்.””

சிற்பத்தில் மறைபொருள்

நமது தெய்வத் திரு உருவங்கள் குறிப்புப் பொருளைப் புலப்படுத்துகின்றவை, (குறிப்புப் பொருள் – Symbolism அதாவது, மறைபொருளாகக் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றவை. உதாரணமாக ஒன்றைக் காட்டுவோம்.

கடவுள் எங்கும் பரந்து இருக்கிறார் என்பது எல்லாச் சமயத்தவரின் கொள்கை. இதனைச் சைவரும் வைணவரும் தமது கடவுள் திருவுருவத்தில் அமைத்துக்காட்டி யிருக்கிறார்கள். அதாவது, திசைகளை நான்காகவும் எட்டாகவும். கூறுவது மரபு. ஆகையினாலே, எல்லாத்திசைகளிலும் பரந்து இருக்கிறவர் கடவுள் என்பதைக் காட்ட, நான்கு கைகளை அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்திருக்கிறார்கள். இவ்வாறே, கடவுளின் மற்றக் குணங்களுக்கும், குறிப்புப் பொருளைக் கற்பித்துத் தெய்வ உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இக்குறிப்புப் பொருள்களை எல்லாம் விளக்கிக் கூறுவதற்கு இது இடமல்ல. காமிகாகமம் முதலிய நூல்களில் கண்டு கொள்க.

பண்டைக் காலத்திலே தமிழர், கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அடையாளங்களை மட்டும் வைத்து வணங்கினார்கள். உதாரணமாக முருகனை வணங்கிய தமிழர், இப்போது வணங்கப்படுகிற முருகன் உருவத்தை வைத்து வணங்காமல், முருகனுடைய படையாகிய வேலைமட்டும் வைத்து வணங்கினார்கள். இந்திரனுடைய உருவத்தை வைத்து வணங்காமல் அவனுடைய வச்சிராயுதத்தை வைத்து வணங்கினார்கள். அல்லது, அவனது வெள்ளை யானை, கற்பகத்தரு இவற்றின் உருவங்களை வைத்து வணங்கினார்கள். இதைத்தான் வேற்கோட்டம், வச்சிரக் கோட்டம், அமரர்தருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.