உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பங்கள்*

1. கங்காதர மூர்த்தி

மகேந்திரவர்மன் காலத்துச் சிற்பங்களைப்பற்றி ஆராய்வோம்: திருச்சி மலைப்பாறையில் மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோயிலில் கங்காதரமூர்த்தியின் திருவுருவம் உள்ளது என்று கூறினோம். அதைப்பற்றி இங்கு விவரிப்போம். கருப்பக்கிருகத்தின் எதிரில் உள்ள பாறைச் சுவரில் கங்கா தரமூர்த்தியின் உருவம். புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம்சுமார் ஏழு சதுர அடிப்பரப்புடையது. இந்தச் சிற்பம், சிற்பக்கலை ரசிகர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வனப்பு வாய்ந்தது. உலகத்தை அழித்து விடுவேன் என்று பெருவெள்ளமாகப் பாய்ந்துவந்த கங்கை யைச் சிவபெருமான் ஒரு துளியளவாகத் தமது சடாமுடியில் ஏற்றுக்கொண்டதை இந்தச் சிற்பம் காட்டுகிறது.

பகீரதன் தவங்கிடந்து ஆகாய கங்கையைப் பூமியில் வரும்படி வரம் வேண்டினான். ஆகாய கங்கை வேகமாகப் பாய்ந்து பூமியை உலகத்தை, அழித்து நாசமாக்குவேன் என்று இறுமாந்து கூறியது. இதை யறிந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவ பெருமான், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பெருவெள்ள மாகப் பாய்ந்துவந்த கங்கையைத் தமது சடாமுடியில் ஒரு புரியை யவிழ்த்துப் பிடித்தார். பெருவெள்ளமாக வந்த கங்கை அவருடைய புரிசடையில் சிறு துளியாக அடங்கி விட்டது. அகம்பாவம் நீங்கிய கங்கையைச் சிவபெருமான் பூமியில் விட்டார். அது கங்கையாகப் பாய்ந்து ஒடியது.

கங்கையின் இறுமாப்பு

எத்தகையது என்பதையும் சிவபெருமான் அதன் இறுமாப்பை எப்படி அடக்கினார் எண்பதையும் மாணிக்கவாசகர் நன்கு விளக்குகிறார்:

மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி

சலமுகத்தால் அவன் சடையில் பாயுமது என்னேடீ

  • மகேந்திரவர்மன் (1955) நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.